கல்லைக் கீழே போடு!நன்றி தினமணி தலையங்கம்Friday November 7 2008
கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படும்போதும், அவர்கள் பயணம் செய்யும் கார் தாக்கப்படும்போதும் தொண்டர்கள் மனக்கொதிப்பு கொள்வது இயல்பானது. அதற்காக, பேருந்துகள் மீது கல்லெறிவதும் தீ வைப்பதும் எந்த வகையில் நியாயம்?
ரயிலும், அரசுப் பேருந்தும் மத்திய, மாநில அரசுகளின் அடையாளங்கள் என்பதால், அரசின் மீதான கோபத்தை இவற்றின் மீது காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது அரசோ, அரசியல் கட்சிகளோ அல்ல. அப்பாவிப் பொதுமக்கள் மட்டுமே!
இந்தக் கல்லெறிச் சம்பவங்களில் வெறுமனே பேருந்துகளின் கண்ணாடிகள்தான் உடைகின்றன என்று நம்பச் சொல்வதைப் போன்ற அபத்தம் வேறெதுவும் இல்லை. கல்வீச்சினால் ரத்தக் காயமடைந்த பயணிகளும், பீதியில் தங்கள் உடைமைகளை மறந்து ஓடிய பெண்களும் குழந்தைகளும் அவர்தம் மனஉளைச்சலும் அழுகுரலும் சம்பவங்களின் கருநிழலுக்குப் பின்னே தள்ளப்பட்டுவிடுகின்றன.
சென்னை அமைந்தகரை பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கல்வீச்சில், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவியின் ஒரு கண் பார்வை பறிபோனது.
வேலூரில் ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகத்தை ஒரு சிலர் தாக்க முற்பட்டபோது காவல்துறையின் தடியடிக்கு எதிர்வினையாக பேருந்து மீது நடத்தப்பட்ட கல்வீச்சில், ஏதுமறியா அப்பாவி சிறுவர்கள் இருவரது மண்டை உடைந்தது. அவர்களைக் காவலர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் வழக்குப் பதிவு செய்யவில்லை.
ஒரு பொதுவேலைநிறுத்தத்தின் போது மயிலாடுதுறை அருகே ஒரு சிலரால் ஒரு பத்திரிகையாளரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் அவரது மகளின் பற்கள் உடைந்தன. ஆனால் வழக்குப் பதிவு செய்ய காவல்நிலையம் மறுத்துவிட்டது.
இத்தகைய சம்பவங்களில் காவல்துறை கேட்கும் ஒரு நல்ல கேள்வி- யார் தாக்கினார்கள்? அடையாளம் சொல்ல முடியுமா? என்பதுதான். கல்லெறியும் வன்முறைக் கும்பல் தன் அமைப்பின் பெயர், தனது பெயரை சொல்லிக்கொண்டா எறியும்? இத்தகைய வழக்கைப் பதிவு செய்தால், நிலுவை வழக்குகளில் ஒன்றாக மாறும் எனக் கருதுகிறது காவல்துறை.
மேலும், யாரும் சாகாதவரை காயமடைந்தவர்களைப் பற்றி கணக்கில் கொண்டுவராமல் விட்டுவிடுவதையே காவல்துறை விரும்புகிறது. இந்த சேதத்துக்கான காப்பீட்டுத் தொகையை போக்குவரத்துக் கழகங்கள் பெறுவதற்கு வசதியாக, வெறுமனே கலவரத்தால் பஸ்கள் சேதம் என்று வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. நூறு பஸ்கள் சேதமடைந்தன என்றாலும் மகிழ்ச்சியுடன் வழக்குப் பதிவு செய்வார்கள். நூறு பேர் ரத்தக்காயம் அடைந்தார்கள் என்றால் அது காவல்துறைக்கு இழுக்கு. அது கலவரத்தை அடக்க முடியாத கையாலாகத்தனம் என்பதாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே படுகாயம் அடைந்த ஓரிருவரை மட்டுமே கணக்கில் காட்டுகிறார்கள்.
அண்மைக் காலமாக, அரசின் மீதான கோபத்துக்குப் பேருந்துகளைக் கல்லெறிந்து தாக்குவது அதிகரித்து வருகிறது. இத்தகைய திடீர் கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம் கட்சித் தலைமையிடம் அல்லது தான் சார்ந்த அமைப்பின் தலைமையிடம் பாராட்டுப் பெறுவது என்பது மட்டுமே.
அப்பாவிப் பொதுமக்களைக் காயப்படுத்தி, பீதிக்கு உள்ளாக்கித்தான் தலைமையின் பாராட்டைப் பெற முடியும் என்பதில்லை. அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அறவழியில் சாலை மறியல் செய்து, தடியடியை தாங்களே மொத்தமாக வாங்கிக்கொண்டாலும் தலைமை பாராட்டும். பரிதாபப்படும்.
கல்லெறிதல், தீயிடலில் ஈடுபடும் தொண்டர்களை கட்சியிலிருந்து நீக்குவதும், அறப்போராட்டம் நடத்துபவர்களை ஆதரிப்பதுமான நடவடிக்கையை அரசியல் தலைவர்கள் கையில் எடுத்தால், கல்லெறிதலும் தீயிடலும் கைவிட்டுப்போகும்.
தொண்டர்களைக் கட்டுப்படுத்துவது தமிழகத் தலைவர்களால் முடியாத செயல் அல்ல. அப்பாவிப் பொதுமக்கள் கல்லடி படுவதையும் பீதிக்குள்ளாவதையும் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment