ஆஷாடபூதிகள்!
"குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது', "எரிகிற வீட்டில் கிடைத்தது ஆதாயம்' என்றெல்லாம் நமது முன்னோர்கள் பழமொழி எழுதி வைத்துவிட்டுப் போனது, இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை விளக்க நமக்கு உதவுவதற்காகத்தான் போலிருக்கிறது. இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது என்பதைவிட, அந்தப் பிரச்னையை எப்படி தங்களுக்குச் சாதகமாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது என்பதில்தான் தமிழகத்திலுள்ள அத்தனை கட்சிகளுமே முனைப்பாக இருக்கின்றன.
"இனப் படுகொலை என்பதெல்லாம் உண்மையல்ல, கொழும்புவில் தமிழர்கள் வியாபாரம் செய்யவில்லையா, திரிகோணமலையில் தேயிலைத் தோட்டங்களில் நமது தமிழர்கள் வாழவில்லையா, மட்டக்களப்பு பகுதியிலிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் செத்து மடிந்து விட்டனரா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி, இலங்கை ராணுவத்தின் செயலை நியாயப்படுத்த முயலும் இவர்களிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி இது ஒன்றுதான். அப்படியானால், இலங்கையின் வடபகுதியில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைந்துவிட்டதே, அது ஏன்?
அகதிகளாக நாடு விட்டு ஓடிப் போனவர்கள், ராணுவத்தின் தாக்குதலால் செத்து மடிந்தவர்கள் போக எஞ்சி இருப்பவர்கள் ஒரு சில லட்சம் பேர் மட்டுமே என்பதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்தான் அங்கே நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், இலங்கை அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சரியென்றும் வாதிடுவார்கள்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகத்துக்கு இருக்கும் அக்கறைகூட நம்மவர்களுக்கு இல்லாமல் போனதை நினைத்து வருந்துவதா இல்லை, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் கோரிக்கையையே நிராகரிக்கும் அளவுக்குத் துணிவு பெற்றிருக்கும் இலங்கை அரசின் ஆணவத்தை நினைத்து ஆத்திரப்படுவதா?
நமது தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் நிலைப்பாடு அதைவிட கேலிக்கூத்தாக இருக்கிறது. ஆளும் திமுகவைப் பொருத்தவரை பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் கதைதான். காங்கிரஸ் கட்சியின் 35 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கும் தைரியத்தில் கோட்டையிலே கோலோச்சும் "மைனாரிட்டி' அரசு என்பதால், தெளிவான நிலைப்பாடு எதையும் எடுக்க முடியாமல், ஒருபுறம் இலங்கைத் தமிழருக்காக நீலிக் கண்ணீரும், மறுபுறம் காங்கிரஸின் தயவுக்காகக் கூட்டுப் பேரணியும் நடத்தித் தனது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது தி.மு.க.
ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள்மீது சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் கருணை மழை பொழிகிறார்கள். சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொறடாவான பீட்டர் அல்போன்ஸ், "ராஜீவ் காந்தி கொலையை மறந்துவிட்டு இலங்கைத் தமிழர்களின் துயரங்களைத் துடைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது' என்று பேசுகிறார். ஆனால் காங்கிரஸ் தலைமையில் இயங்கும் மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு அனைத்துவித உதவிகளையும் செய்து வருகிறது.
திமுகவுடன் கைகோர்த்துப் பேரணி நடத்துவதும், விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோமே தவிர இலங்கைத் தமிழர்கள் பற்றி நிஜமாகவே கவலைப்படுகிறோம் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் இலங்கை ராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் சத்தம் போடாமல் அளித்து வரும் சாமர்த்தியம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் வரும்.
ஆரம்பம் முதலே விடுதலைப் புலிகள் விஷயத்திலும், இலங்கைப் பிரச்னையிலும், சரியோ தவறோ, தடுமாற்றமே இல்லாத நிலைப்பாட்டை எடுத்து வந்திருப்பது அதிமுகதான். ஆனால், அரசியல் ஆதாயத்துக்காகத் தனக்கு உடன்பாடு இல்லாத கருத்துகளைக் கொண்டிருக்கும் கட்சிகளுடன் தோழமை பூண்டிருப்பது என்பது முரண்பாடாக இருக்கிறதே? இது அரசியல் ஆதாயமில்லாமல் வேறென்ன?
இலங்கைப் பிரச்னையில் திமுகவின் நிலைப்பாடு போலித்தனம் என்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு, அப்பழுக்கில்லாத அரசியல் பித்தலாட்டம்! குழாயடிக் கூச்சல்கள் இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க உதவாது என்கிற அவரது அறிக்கையை டாக்டர். ராமதாசே ஒருமுறை படித்துக் கொண்டால் நல்லது. திமுக ஆட்சியைக் கவிழ்க்கவிட மாட்டோம் என்று கூறிக்கொண்டே, இலங்கைப் பிரச்னையை முன்னிறுத்தி அணி மாற வியூகம் வகுக்கும் பாமகவின் சுயநலத்தை வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை. ஊருக்கு உபதேசம் சொல்லும் மருத்துவர் ராமதாஸ் தனது மகனின் ராஜிநாமாக் கடிதத்தை வீசியெறியத் தயாராக இல்லையே, ஏன்?
மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும், இடதுசாரிகளும் கொள்கை முரண்பாடுகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு, இலங்கைத் தமிழரின் கண்ணீரைத் துடைக்கப் புறப்பட்டிருப்பது, அவரவர் லாபத்துக்காகத்தானே தவிர இவர்களால் என்னதான் செய்துவிட முடியும்? பாஜகவும் இலங்கைத் தமிழர் பற்றிப் பேசத் தொடங்கி இருக்கிறது. பலே, ஆட்சியில் இருக்கும்போது காட்டாத அக்கறை இப்போது தேர்தல் நேரத்திலாவது வந்திருக்கிறதே!
"பாரத ஜனங்களின் தற்கால நிலைமை' பற்றி பாரதி பாடுவான்~"நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்'' என்று. இலங்கைத் தமிழர் பிரச்னையில், தமிழக அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் பற்றி சொல்வதாக இருந்தால், உண்மை, உண்மை, அது முற்றிலும் உண்மை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment