Pages

Tuesday, February 3, 2009

மக்கள் எவ்வழி; ஆட்சியும் அவ்வழி! THANKS TO dINAMANI

மக்கள் எவ்வழி; ஆட்சியும் அவ்வழி!

என். முருகன்


அமெரிக்காவின் 44-வது அதிபராக ஜனவரி 20-ம் தேதி பராக் ஒபாமா பதவியேற்றபோதும், அதற்கு முன்பு தேர்தலை ஒட்டி நடந்த விவாதங்களைக் கூர்ந்து கவனித்தபோதும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனநாயக அமைப்பும், இங்கே மக்களாட்சி செயல்படும் விதமும் கவலை அளிக்கிறது.

ஜனநாயகம் மக்களுக்கு சுபீட்சத்தை அளிக்க முடியாது எனவும், படிப்பறிவு இல்லாதவர்கள் கையில் ஓட்டுரிமை கிடைத்தால் சுயநல அரசியல்வாதிகள் வாக்கு வங்கிகளை உருவாக்கி ஊழல் சாம்ராஜ்யங்களை உருவாக்கி விடுவார்கள் எனவும், பல அரசியல் தத்துவ மேதைகள் எச்சரித்திருக்கிறார்கள். ஆனால் ஜனநாயகம்தான் சரியான ஆட்சிமுறை என்பதை, சிறுபான்மை இனத்தவரான ஒபாமாவை தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்காவிலுள்ள பெரும்பான்மை வெள்ளை இனத்து மக்கள் நிரூபித்துள்ளார்கள்.

அவரது பதவியேற்பு நிகழ்ச்சி ஜனவரி 20-ம் தேதி எனினும் அதற்கான நடவடிக்கைகள் 17-ம் தேதியே தொடங்கின. அன்று ஒபாமா பிலடெல்ஃபியாவில் ரயிலில் ஏறி, வாஷிங்டன் நோக்கித் தனது பயணத்தை தொடங்கினார். 1861-ல் அதிபராகப் பதவியேற்க ஆப்ரஹாம் லிங்கன் இதேபோல் ரயில் பயணத்தை ஜனவரி 17-ல் தொடங்கியதுதான் தனக்கு வழிகாட்டி எனக் கூறிவிட்டு தனது பயணத்தைத் தொடங்கி 20-ம் தேதி வாஷிங்டன் நகரை வந்தடைந்தார்.

219 கிலோ மீட்டர் பயணத்தின்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து தங்களின் வருங்கால அதிபரை வாழ்த்தி வழியனுப்பினார்கள். பல நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட ஒபாமா செய்த காரியங்களில் ஒன்று, ஜனவரி 19-ம் தேதி ஒரு விருந்தில் கலந்துகொண்டு அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கைனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அவரை ""அமெரிக்காவின் கதாநாயகன்'' என வருணித்ததுதான்.

அதிபர் தேர்தலில் வெற்றியடைந்தவுடன் நவம்பர் 5-ம் தேதி ஒபாமா ஆற்றிய உரையில், எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் மெக்கைன் தனக்கு தொலைபேசியின் மூலம் வாழ்த்துச் செய்தி அளித்ததாகக் கூறினார். ""என்னை எதிர்த்து தேர்தலில் கடுமையாகப் போரிட்டவர் மெக்கைன். அதைவிட கடுமையாக நம் நாட்டின் ஜனநாயக நெறிகளை காப்பாற்ற வியத்நாமில் யுத்த வீரராகப் போரிட்டு, தன்னை மிகச் சிறந்த தியாகியாக உருவாக்கிக் கொண்டவர் அவர்'' என மனதாரப் பாராட்டினார்.

அப்படியே நம் நாட்டிற்கு வாருங்கள். என்றைக்காவது ஒருநாள் ஏதேனும் ஒரு தேர்தலில் வெற்றிபெற்ற ஒரு பிரதமரோ, முதல்வரோ தன்னை எதிர்த்து தோல்வியுற்ற கட்சியின் தலைவரை புகழ்ந்ததுண்டா? தமிழ்நாட்டில் ஒரு தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியினர், தேர்தல் முடிவு வெளிவந்த நாளில் இரவில் பல வாகனங்களில் உருட்டுக் கட்டைகளுடன் பல நகரங்களில் வலம்வந்து தோற்ற கட்சியினரை தாக்கியதையும், அவர்களின் வீடுகளின் மீது கல்லெறிந்ததையும் நாம் கண்டிருக்கிறோம். ஒரு கட்சியின் தலைவர் மரணமடைந்த போது மாற்றுக் கட்சித் தலைவர் மலர்வளையம் வைக்கச்செல்லும் போது எதிர்த்து கோஷமிட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும் நாம் கண்டிருக்கிறோம்.

எம்.ஜி.ஆர். இறந்தபோது, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்களில் ஒருவர், கடப்பாறை கொண்டு திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை இடித்துத் தரைமட்டமாக்கியதை இன்னமும் நாம் மறக்கவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பல கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வெற்றி பெற்றவர் ஒபாமா. ஆனால் புஷ் குடும்பத்தினருடன் ஒபாமா குடும்பத்தினர் விருந்துண்டு, பின் திருமதி புஷ், திருமதி ஒபாமாவை அழைத்துக்கொண்டு அதிபர் மாளிகையை சுற்றிக்காட்டி, அதன் அம்சங்களை விளக்கிச் சொல்லியிருக்கிறார். முந்தைய அதிபர் புஷ் தனது மனைவியுடன் வாஷிங்டன் விமான நிலையத்தில் சாதாரண பயணிகளுடன் ஒரு விமானத்தில் ஏறி டெக்ஸôஸ் மாகாணத்திற்கு பறந்து சென்று தனது இல்லத்தை அடைந்திருக்கிறார்.

அப்படியே இங்கே வருவோம். 2009-ம் ஆண்டு மே மாதம் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியோ அல்லது மூன்றாவது அணியின் தலைவியாகிய மாயாவதியோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், புதிய பிரதமராகவிருக்கும் தலைவருடன் ஒரு விருந்தில் மன்மோகன் சிங் கலந்துகொண்டு நாட்டு நிலைமையை அலசிப் பேசி தனது கருத்தினைக் கூறி அன்புடன் விடைபெறுவாரா?

பதவியிலிருந்து இறங்கிவிட்ட குடியரசுத் தலைவர்கள் தங்களுக்கு அரசு வீடுகள் வேண்டும் எனக் கேட்டுப் பெறுகிறார்கள். பல எம்.பி.க்களும், அமைச்சர்களும் அரசு வீடுகளை காலி செய்ய பல மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அமெரிக்க அதிபர் புஷ், புதிய அதிபர் பதவி ஏற்றவுடன், எட்டு வருடம் தங்கி இருந்த வெள்ளை மாளிகையைக் காலி செய்துவிட்டு, ஒரு விமானத்தில் மற்ற பயணிகளுடன் டிக்கெட் வாங்கி தனது ஊருக்குப் பயணம் செய்கிறார்.

ஒபாமா பதவி ஏற்பு நிகழ்ச்சியை வாஷிங்டன் டிசி நகரில் கண்டுகளிக்க அமெரிக்காவின் 50 மாநிலங்களிலிருந்தும் 20 லட்சம் மக்கள் கூடியுள்ளார்கள். சுமார் 10 லட்சம் கார்களில் தலைநகருக்குள் நுழைந்து அதிபர் பெயர், உருவம் பொறித்த பனியன்களை வாங்கி அணிந்துகொண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி மகிழ்ந்துள்ளனர்.

நமது நாட்டில் சுமார் 2 லட்சம் பேர் தலைநகர் தில்லியில் ஒரே நேரத்தில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் கூடி ஒரு நிகழ்ச்சியை நடத்த முடியுமா? குப்பை கூளங்கள், அடிதடிகள் இல்லாத கட்சி மாநாடுகளை நம் நாட்டில் நடத்த முடியவில்லை, ஏன்?

அதற்குக் காரணம், ஜனநாயகத்தின் சிறப்பும் மாண்பும் நம்மில் ஊடுருவவில்லை. அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் பதவியிலிருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் ""ஆட்சியும் அதிகாரமும் எங்களுடையது'' என்பதை மக்கள் பிரகடனம் செய்வதுதான் அமெரிக்க ஜனநாயகத்தின் மிகச் சீரிய அம்சம். அவர்களின் தேர்தல் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அதிபரை தேர்ந்தெடுத்தாலும் அதிகார மமதை அதிபருக்கோ அல்லது துணை அதிபருக்கோ ஏற்பட்டதில்லை. தேர்தல் நேர சொற்பொழிவுகளின்போது நான் இவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என்று யாரும் சொல்வதில்லை.

நம் உள்ளூர் தேர்தலில் உணவு, உடை மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்படுவதை அமெரிக்காவின் சராசரி மனிதர் யாரும் நம்பவே மறுக்கிறார்கள். பதவியிலிருந்தபோது புஷ் எந்த மேம்பாலத்தையும் வண்ண ஒளிகளுடன் கூடிய சீரியல் பல்புகள் அலங்காரத்துடன் திறந்து வைத்ததில்லை. தாற்காலிக வேலையிலிருப்பவர்களை நிரந்தரமாக்கும் பணி நியமன உத்தரவுகளை அதிபர் நேரில் வழங்கியதில்லை.

நமது நாட்டில் ஜனநாயகம் உருவாக வேண்டும் என தீவிரமாக முயற்சித்த நமது தேசத் தலைவர்கள் அனைவரும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளின் ஜனநாயகத்தைப் போற்றிப் பாராட்டும் இளம் பட்டதாரிகளாக சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தவர்கள். அவர்கள் உருவாக்கித் தந்த இந்திய ஜனநாயகம், மேலைநாடுகளையும் விட சிறந்தது என்பதுதான் உண்மை. உதாரணமாக, கிரேக்க, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைவிட இந்தியாவில் அரசியல் கட்சிகள் எல்லாவற்றிற்கும் தனிக்கொடிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு மண்டபத்தில் குடியரசு அல்லது ஜனநாயகக் கட்சியின் கூட்டம் நடந்தால் அங்கே பறக்கும் கொடி அமெரிக்க நாட்டின் தேசியக்கொடியே! வெளியே பேனரில் கட்சியின் பெயர் இருக்குமே தவிர தனிக் கொடி கிடையாது.

இங்கே சுமார் 1476 கட்சிகளுக்கும் அதே எண்ணிக்கையில் கொடிகள். ஆனால் ஜனநாயகத்தை மாற்றி, மக்களை ஏமாற்றி ஓட்டுகளைப் பெற்று இலவசங்களை அளித்து, கூட்டணி அரசாங்கம் என்ற வியாபார அரசியலை, நமது அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக இருந்து அரசியல் கட்சிகளை உருவாக்கிய தியாகச் செம்மல்கள் கற்பனை செய்திருக்கவே மாட்டார்கள். அதனால்தான் இதுமாதிரியான கேலிக்கூத்துகள் நடக்க முடியாதபடி, தடுக்கும் ஷரத்துகள் நம் அரசியல் சட்டத்தில் இல்லை.

தமிழகத்தில் தற்போது நடந்த ஒரு இடைத்தேர்தல் ஜனநாயக நெறிமுறைகளுக்கு சாவுமணி அடித்ததையும், அதே காலகட்டத்தில் ஜனநாயகத்தை சீரும் சிறப்புமாக செழிக்கச் செய்யும் வகையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்ததையும் ஒரே நேரத்தில் கண்ட நாம் சாக்ரடீஸ், பிளாட்டோ போன்ற தத்துவமேதைகள் சொன்னபடி ஜனநாயகம் கேடு விளைவிக்கும் என்பதை ஒத்துக்கொள்வதா அல்லது அமெரிக்கத் தலைவர்கள் சொல்லும் ஜனநாயகத்தின் நற்பண்புகளை நம்புவதா என்று தெரியாமல் விழிக்கிறோம்.

அமெரிக்கா போன்ற முதிர்ந்த ஜனநாயக நாடுகளில், மக்கள் அரசியல்வாதிகளை வழிநடத்துகிறார்கள். அரசியல்வாதிகள் தேசத்தை, தேசத்தின் பொருளாதாரத்தை, வெளியுறவுக் கொள்கைகளை வழிநடத்துகிறார்கள். மக்களது உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பதுதான் மக்களாட்சி என்பதை உணர்ந்து செயல்படுகிறார்கள் அவர்கள். இங்கேயோ, மக்கள் விலைகொடுத்து வாங்கப்படும் பொருள்கள் என்று கருதி செயல்படுகிறார்கள் நமது அரசியல்வாதிகள். மக்கள் விழித்துக்கொண்டு, அரசியல்வாதிகளைத் தங்களது கட்டுக்குள் வைத்திருக்கத் தங்களிடம் தரப்பட்டிருக்கும் ஆயுதமான வாக்குச் சீட்டை முறையாகப் பயன்படுத்தத் தெரியாத காரணத்தால், வாக்குச் சீட்டு கரன்சி நோட்டுக்குப் பண்டமாற்றம் செய்யப்படுகிறது. அதுதான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கோளாறு.

ஆக, வின்ஸ்டன் சர்ச்சில் கூறியபடி மக்கள் தங்களுக்கு ஏற்ற அரசினை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதே சரி. நம் மக்களால் சரியான அரசைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை.

No comments: