Pages

Tuesday, January 27, 2009

விதியின் சதியா? மதியின் பிழையா? Thanks to Dinamani

விதியின் சதியா? மதியின் பிழையா? Thanks to Dinamani


இலங்கைப் போர் தானாகவே ஓயும் வரை பிரச்னையைக் காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான்!

முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. தங்கள் வெற்றியைக் காட்டுவதற்காக பத்திரிகையாளர் குழுவை அழைத்துச் செல்லவும் இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தங்கள் நாட்டின் ஒரு பகுதியைத் தாங்களே மீட்டெடுத்து வெற்றிக்கொடி ஏற்றியுள்ள இன்றைய சூழலில், இலங்கை ராணுவம் தன் பீரங்கிகளுக்கு ஓய்வு கொடுப்பது இயல்பானது. இதைப் போர் நிறுத்தம் என்று சொல்ல முடியாது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பகுதிகளை இழந்தாலும்கூட அவர்கள் மீண்டும் கொரில்லா போரை நடத்தவே செய்வார்கள். ஆகையால் விடுதலைப் புலிகளைப் பொருத்தவரையில் இந்தப் போர் தொடரும். தமிழீழம் கேட்டு எப்போதும்போல அவர்கள் தாக்குதலை நடத்துவார்கள். ஆனால், அது இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்குமே தவிர, இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக மீண்டும் மாறுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

கடந்த கால் நூற்றாண்டில் இலங்கைத் தமிழர்கள் போராடிப் போராடி ஓய்ந்து விட்டார்கள். மீண்டும் இலங்கை ராணுவத்தை எதிர்கொள்ளவும், விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆள் மற்றும் ஆயுதம் அளிக்கவும் அவர்களால் முடியுமா என்பதும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

இத்தனை காலமாக விடுதலைப் புலிகளின் பகுதிகளை நெருங்க முடியாத இலங்கை ராணுவம், மிகக் குறுகிய காலத்தில் அதைச் செய்து முடித்ததற்கு முக்கியமான நான்கு காரணங்கள் உண்டு. இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கையில் குடியேறிய தமிழர்களுக்கும் இடையே இருந்த விரிசலை மிகவும் பெரிதாக்கி, தனக்கு ஆதரவைத் தேடிக்கொண்டது இலங்கை அரசு. இரண்டாவதாக, கிழக்கு மாகாணத்தில் அரசியல் தீர்வுக்கு கர்னல் கருணாவை இணங்கும்படி செய்ததும் இலங்கை அரசுக்குப் பலமாக அமைந்துவிட்டது. உலக அளவிலான தீவிரவாதத்துக்கு எதிரான ஆதரவை விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது என்பது மூன்றாவது காரணம். நான்காவது முக்கியமான காரணம் இந்திய அரசு, இலங்கை அரசுக்குத் தந்த மறைமுக ஒத்துழைப்பு.

இருபத்தைந்து ஆண்டுகளாக நுழைய முடியாத வன்னி காடுகளுக்குள் இலங்கை ராணுவத்தால் நுழைய முடிகிறது என்றால் அது, பாம்பின் கால் பாம்பறியும் என்பதாக, விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கர்னல் கருணா தந்த தகவல்களின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

"வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஒரு கருணா' என்பதுதான் இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகளின் கோஷமாக இருக்கிறது.

நாளைய தமிழர் வரலாற்றில், இலங்கைப் பிரச்னையில் ஏற்பட்ட பின்னடைவு பற்றிக் குறிப்பிடும் போது, நிச்சயமாக இந்த வரிகள் இடம்பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை: "கருணா காட்டிக் கொடுத்தார்; கருணாநிதி கண்டும்காணாமல் இருந்தார்'.

ஏனென்றால், தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும், மத்திய கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்தும்கூட இலங்கை ராணுவத்தின் தாக்குதலை நிறுத்த முடியாமலும், இந்திய ராணுவத்தின் உதவிகளைத் தடைசெய்ய முடியாமல் விஷயத்தை தள்ளிப்போட்டதற்காகவும், தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த ஆதரவுக்குரல் கொடுத்தபோதும் அதை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியதற்காகவும் "உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்' என்று திமுகவினரால் அழைக்கப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியையும் வரலாறு குற்றம் சுமத்தும்.

மத்திய அரசின் அரசியல் ஆய்வுக் குழுவில் ப. சிதம்பரம், டி.ஆர்.பாலு என்ற இரு தமிழர்கள் இடம்பெற்று இருப்பதால், மத்திய அரசு ஏன் தாமதித்தது அல்லது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்பதாக முதல்வர் கருணாநிதி சொல்லவே முடியாது.

முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் பிரதமரும் நானும் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தோம் என்று மக்களின் பரிதாபத்தைப் பெறவும் இயலாது.

தமிழ்ச் சாதி பற்றி மகாகவி பாரதியார் எழுப்பிய அதே கேள்விதான் இன்று நமக்கும் எழுகிறது:

""...........................கலியின் வலியை
வெல்லல் ஆகாதென விளம்புகின்றனரால்.
நாசம் கூறும் "நாட்டு வைத்தியர்'
இவராம். இங்கு இவ் இருதலைக் கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர்?
விதியே! விதியே! தமிழ்ச் சாதியை
என்செயக் கருதி இருக்கின்றாயடா?''

Thursday, January 22, 2009

மறத்துப்போன மனிதாபிமானம் Thanks to Dinamani

மறத்துப்போன மனிதாபிமானம்

க. கிருஷ்ணசாமி

அண்டை நாடான இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு மேலாக சுயநிர்ணய உரிமைக்காகவும் தங்களது பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அமைப்புகளும், அதன் தலைவர்களும் தலைமை தாங்கி இருக்கிறார்கள்.

உரிமைப் போராட்டம் துவக்கத்தில் அறவழியிலும் பின் ஆயுதம் தாங்கிய போராட்டமாகவும் உருவெடுத்தன.

இலங்கையின் மையப்பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் பல தலைமுறைகளாகப் பணிபுரிந்த தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கு அன்று போடப்பட்ட ஒப்பந்தமே தமிழர்களுக்கு எதிரான மாபெரும் மனித உரிமை மீறலாகும். இன்று இலங்கையில் நடைபெறும் அனைத்து அவலங்களுக்கும் அன்றே விதை ஊன்றப்பட்டுவிட்டது.

ஏழு தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி எடுத்துக் கொண்டால் நாலு தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்பதற்கு போடப்பட்ட சிறீமாவோ - லால்பகதூர் சாஸ்திரி ஒப்பந்தம் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

இன்றும் லட்சக்கணக்கான தமிழர்கள் குடியுரிமை அற்றவர்களாகவும், வாக்குரிமை அற்றவர்களாகவும், இலங்கை அரசால் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட வேண்டிய தேசிய அடையாள அட்டைகள்கூட வழங்கப்படாததால் "அநாதைகள்' என்ற அவலமான அந்தஸ்தோடும் தமிழர்கள் வாழும் நிலை உள்ளது.

இதன் காரணமாக வேலை தேடி வேறு இடங்களுக்குச் செல்ல முடியாமல் பிறந்த இடத்திலேயே அடிமைகளைக் காட்டிலும் கேவலமான நிலையில் முடங்கி வாழ வேண்டிய சூழலால் எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் விரக்தியின் எல்லைக்குச் சென்று தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இலங்கையின் மையப்பகுதியில் தமிழர்கள் அதிகமாக வாழும் நுவரேலியா மாவட்டம் உலக அளவில் தற்கொலை செய்வோரின் தலைமையிடமாக இன்று திகழ்கிறது. எனினும் இன்றும் தேயிலைத் தோட்டத் தமிழர்கள் சாதாரண அடிப்படை உரிமைகளுக்காகக் கூட போராட ஒன்றுபடவில்லை. முன்வரவில்லை. அரை அடிமைகளாகவும், முழு அடிமைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயத்தில் கல்வி மற்றும் மொழி உணர்வுகளில் விழிப்பு பெற்ற யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் தங்களது சுயநிர்ணய உரிமைக்காக சற்று வேகமாகக் குரல் கொடுத்ததற்காக இன்று தண்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பேரினவாத கொடுங்கோன்மையிலிருந்து விடுபட்டு மனிதாபிமானத்தோடும், மானத்தோடும், பாதுகாப்போடும் வாழ்ந்து வந்த தமிழர்கள் மீண்டும் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கிளிநொச்சி, ஆணையிறவு அல்லது முல்லைத்தீவு போன்ற பகுதிகளின் வீழ்ச்சியால் சிங்கள பேரினவாத அரசு மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் மனிதாபிமானமுள்ள எவரும் மகிழ்ச்சி கொள்ள இயலாது.

இடிந்து போன வீடுகள், தகர்ந்துபோன வீதிகள், மனித நடமாட்டமேயில்லாத கிளிநொச்சியின் கோரக்காட்சி ஒவ்வொரு தமிழனையும் கண்ணீர் சிந்த வைத்திருக்கும். என்றோ தமிழன் வாழ்ந்த லெமூரியா கண்டத்தை கடல்கோள் பலி கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி சில நகரங்களை சூறையாடியது. இன்று சிங்கள பேரினவாத ராணுவம் கிளிநொச்சியை கபளீகரம் செய்துள்ளது. இலங்கைத் தமிழ் மக்களையும், இந்தியத் தமிழர்களையும் ஒரு கடலும், இரண்டு கரைகளும் பிரிக்கலாம். ஒன்றிப்போன உறவுகளைப் பிரிக்க முடியுமா?

பயங்கரவாதம் இந்திய இறையாண்மைக்கு எல்லை கடந்து சில அச்சுறுத்தல்களை அவ்வப்போது ஏற்படுத்துகிற காரணத்தால் பல லட்சம் இலங்கை வாழ் தமிழர்களின் நூறாண்டு காலம் தன்மானத்திற்கான போராட்டம்கூட இன்று கேட்பாரற்றுப் போய்விட்டது.

பஞ்சசீலக் கொள்கையின் தந்தை நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இந்தியா வறுமையில் திளைத்த காலகட்டத்திலும்கூட உரிமைக்காகப் போராடியவர்களுக்குக் குரல் கொடுத்து மூன்றாம் உலக நாடுகளில் இந்தியாவின் தனித்தன்மையை நிலைநாட்டினார்கள்.

அண்டை நாடுகளின் நட்பு, அணிசேராக் கொள்கை ஆகியவற்றைக் கடைப்பிடித்த அதேநேரத்தில் உலகெங்கும் இனவெறி, நிறவெறி, மொழிவெறிக்கு எதிராகப் போராடிய மக்களுக்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்த இந்திய அரசின் மாண்பை ஒருக்காலும் மறுக்க இயலாது.

மண்ணுரிமைக்காகப் போராடிய பாலஸ்தீன மக்களையும், யாசர் அராபத்தையும், நிற வெறிக்கு எதிராகப் போராடிய தென் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களையும், நெல்சன் மன்டேலாவையும், மதம் ஒன்றாக இருந்தாலும்கூட வங்காள மொழி மற்றும் இனவிடுதலைக்காகப் போராடிய கிழக்கு வங்காள மக்களையும், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்களின் போராட்டங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தது அன்றைய இந்திரா அரசு.

அந்த மரபிலிருந்து இந்திய அரசு ஒருபோதும் விலகிச் செல்ல முடியாது. அதுவும் இந்திராவின் மருமகளும், ராஜீவ் காந்தியின் துணைவியுமான சோனியா காந்தியின் தலைமையில் ஓர் அரசு உள்ள இந்தச் சூழ்நிலையில் தங்களது வாழ்வுரிமைக்காக கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதிலிருந்து மத்திய அரசு சற்றும் விலகிச் செல்லக் கூடாது.

ஆறு கண்டங்களிலே வாழ்கின்ற எட்டுக் கோடி தமிழ் மக்கள் இலங்கையில் நடக்கும் சம்பவங்களை எண்ணி எண்ணி உள்ளூர குமுறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்களுடைய நிலையோ ""நீருக்குள் மீன் அழுதால் எவர் அறிவார்'' என்பதைப் போன்று உள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடும் ஓர் அமைப்பின் கொள்கையில் இந்திய அரசுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், அல்லது அதை நிராகரிக்கலாம். ஆனால் இப்பொழுது இலங்கைத் தமிழர்களுக்கு அதுவல்ல பிரச்னை. சிங்கள ராணுவத்தின் கொடும் தாக்குதல் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

ராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சித் தங்களுடைய இருப்பிடங்களையெல்லாம் விட்டு காடுகளிலும் மேடுகளிலும் கடும் வெயில், மழை ஆகிய இயற்கைச் சீற்றங்களுக்கும் பலியாகி உண்ண உணவு, உடுக்க உடை, கொடிய விஷ ஜந்துக்களின் கடிகளுக்குக்கூட உரிய மருந்துகள் இன்றி தமிழர்கள் மடியும் நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டாமா?

தமிழர்கள் என்று கூட பார்க்க வேண்டாம், ""மனிதர்கள்'' என்று பார்த்தால்கூட இருநூறு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் ராணுவத்தின் தாக்குதலுக்கு தினம் தினம் ஆளாகும் ""மாந்தர்களை'' காப்பாற்றும் குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட தமிழர்களின்பால் காட்டப்பட வேண்டாமா? அந்த அளவுக்கு ""இந்திய அரசை ஆள்வோரின் மனம் மறத்துப் போகலாமா?''

எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து இந்தியப் பேரரசு விரைந்து செயல்பட்டு இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கை ராணுவம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.

தமிழர்கள் அவர்களுடைய சொந்த வீடுகளுக்குத் திரும்பக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும். அமெரிக்காவில் நிலவுகின்ற கூட்டாட்சியைப் போன்று இலங்கையில் அரசு அமைத்து தமிழர்கள் சம உரிமையோடு வாழ்கின்ற நிலையை உறுதிப்படுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

க்கு உண்மை தெரிந்தது சொல்வேன்: காந்தி கண்ட கனவு! Thanks to Dinamani

.எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்: காந்தி கண்ட கனவு!

கே.வைத்தியநாதன்


அமெரிக்காவின் 44-வது அதிபராக 47 வயது பராக் ஹுசேன் ஒபாமாவின் பதவி ஏற்பு விழாவைத் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புகளில் பார்த்த அனைவரும், நடப்பதெல்லாம் நிஜம்தானா என்று பல தடவை கிள்ளி விட்டுக் கொள்ள நேர்ந்திருக்கும்.

அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கையையோ வெளிவிவகாரக் கொள்கையையோ நாம் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கலாம். "நாம்' என்று கூறுவது ஏன் என்றால் என்னைப் போன்ற பலருக்கும் அவை ஏற்புடையதல்ல. ஆனால், மக்களாட்சியின் மகத்துவத்துக்கு அமெரிக்காவைவிட ஒரு உதாரணம் இருக்க முடியுமா என்றால், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி "இல்லை, இல்லை' என்று குரலெழுப்பத் தோன்றுகிறதே!

இப்படியெல்லாம் ஒரு தலைவர் இருக்க முடியுமா? இப்படி ஒரு ஜனநாயக உணர்வுள்ள ஒரு தேசம் இருக்க முடியுமா? இப்படி ஒரு தேசப்பற்றுள்ள மக்கள் வேறு எங்காவது இருப்பார்களா, இருக்கிறார்களா என்று பிரமிக்கவைத்து விட்டார்கள், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அங்கே போய் குடியேறிய இப்போது அமெரிக்கர்களாக இருக்கும் பல்வேறு இனத்து மக்களும், மதத்தினரும்!

பராக் ஹுசைன் ஒபாமா! எத்தனை அற்புதமான தலைவர் இவர். அவரது முகத்தில் வெற்றிக் களிப்பைக் காணமுடியவில்லை. இறுமாப்பின் நிழல்கூட இல்லை. ஆனால், என் தாய் மண்ணின் தலையெழுத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என்கிற லட்சிய வெறி இருக்கிறது.

ஒட்டுமொத்த மனித இனத்தை வழிநடத்தும் பொறுப்பு தான் வகிக்கும் பதவிக்கு இருக்கிறது என்கிற கடமை உணர்வு இருக்கிறது.

ஒருபுறம் பயங்கரவாதம், மறுபுறம் பொருளாதாரப் பின்னடைவு. இவைகளுக்கு இடையே தத்தளிக்கும் அமெரிக்காவுக்கு நம்பிக்கை ஊட்டுவதுடன் மக்களின் ஒத்துழைப்புடன் அந்த சவால்களை எதிர்கொள்ளவும், வெற்றி காணவும் முடியும் என்று அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொள்கிறாரே, இவரல்லவா தலைவர்?

பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். அதிகாலையில் எழுந்திருந்து, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாதா கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை நடத்துகிறார். நான் நாத்திகன் என்றோ, கடவுள் இல்லை என்றோ ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. மனைவியையும் குழந்தைகளையும் மாதா கோயிலுக்குத் தனது சார்பில் அனுப்பிவிட்டு, நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று பகல் வேஷம் போடவில்லை. தனது இறை நம்பிக்கையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் நாணயம் அவருக்கு இருக்கிறது.

சரி, பெருவாரியாக கிறிஸ்தவர்கள் வாழும் அமெரிக்காவில் அதிபராகும் வேளையில் தனது இஸ்லாமியப் பின்னணியை மறைக்க வேண்டும் என்று நினைத்தாரா என்றால் அதுவும் இல்லை. உலகமெலாம் பரந்துகிடக்கும் இஸ்லாமிய சமுதாயம் அமெரிக்காவின் மீது கோபமாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும், தனது பிறப்பையோ, வளர்ப்பையோ மறைக்க விரும்பாத இந்த மனிதனின் துணிவு நம்மை அசர அடிக்கிறதே...

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக முதன்முதலில் உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்று, அதற்காகத் தனது உயிரைப் பலி கொடுத்த முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் தனது பதவிப் பிரமாணத்துக்கு 1861-ல் பயன்படுத்திய அதே பைபிள் மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பராக் ஒபாமாவின் செய்கை நமது இந்திய அரசியல்வாதிகளின் சில்லரை புத்திக்கு ஒரு சம்மட்டி அடி.

பராக் ஒபாமா ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். ஆபிரகாம் லிங்கனோ குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆச்சரியம் இத்தோடு முடிந்து போகவில்லை.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிப் பிரமாண சடங்கில் பிரமிக்கவைத்த இன்னொரு விஷயம் ஒன்று உண்டு. அங்கு கூடியிருந்த 20 லட்சம் மக்களில் ஒருவர்கூட ஜனநாயகக் கட்சி கொடியுடன் வந்திருக்கவில்லை. அத்தனைப்பேரும் தேசியக் கொடியுடன் தங்களது ஒட்டுமொத்த தேசத்தின் தலையெழுத்தையும் அடுத்த நான்கு ஆண்டுகள் வழி நடத்த இருக்கும் கறுப்பர் இனத் தலைவரிடம் பதவிப் பிரமாணத்தின் மூலம் அமெரிக்க நாட்டின் சாதனையை பிரகடனப்படுத்தியிருக்கிறார்களே! அந்த தேசிய உணர்வுக்கு தலைவணங்காமல் இருப்பது எங்ஙனம்?

நமது நாட்டில் இப்படியொரு பதவிப் பிரமாணம் நடந்திருந்தால் அதில் கட்சிக் கொடிகள் அல்லவா இருந்திருக்கும்? தேர்தல் முடிந்து ஆட்சியில் அமர்ந்துவிட்டால் கட்சி மாச்சரியங்களை மறந்து, ஒட்டுமொத்த மக்களின் தலைவராக பதவியேற்று ஆட்சி நடத்தும் அரசியல் பக்குவம் நம்மிடம் இல்லாமல் போனது ஏன்?

தனது பதவிப் பிரமாணத்தைக் காண அமெரிக்காவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் திரண்டு வந்திருக்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முன்னிலையில், "ஆதலால் ஆண்டவரே எனக்கு உதவுவீராக' என்று இறைவனின் துணையுடன் தனது சரித்திரக் கடமையை நிறைவேற்ற இருக்கும் இந்த மாமனிதன் அதற்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரை இருக்கிறதே, அதன் தனிச் சிறப்பு உலகிலுள்ள அத்தனை நாடுகளுக்கும் அது பொருந்துவதாக இருக்கிறது என்பதுதான்.

பராக் ஒபாமாவுக்கு பதில் அந்த உரையை புதினோ, சர்கோசியோ, மன்மோகன்சிங்கோ யாராக இருந்தாலும், அவரவர் நாட்டு மக்களின் பிரச்னைகளின் கடுமையையும், அதிலிருந்து வெளிவர முடியும் என்கிற நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் அற்புதமான உரை அது.

""நாம் சந்திக்கும் சவால்கள் உண்மையானவை. அவை பலதரப்பட்டவை. அவை கடுமையானவை. மிகவும் குறுகிய காலத்தில் அவைகளுக்கு நாம் தீர்வு காண்பது இயலாத விஷயம்'' என்கிற உண்மை நிலைமையைத் துணிந்து மக்கள் முன் வைக்கிறார்.

""கருத்து சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்களும், பெண்களும் தங்களுடைய முழுமையான திறமையை வெளிப்படுத்தி, தேசநலனுக்காக, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட்டு செயல்பட்டால் எதையும் சாதித்துக் காட்ட முடியும்'' என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறார்.

""நமது அரசாங்கம் பெரியதா, சிறியதா என்பதல்ல பிரச்னை. அது செயல்படுகிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம். குடும்பங்களில் நிம்மதியும், அமைதியும் நிலவுகிறதா, வேலையில்லாத் திண்டாட்டம் போகப் பயன்படுகிறதா, கெüரவமான ஊதியத்துக்கு வழி செய்கிறதா, முதியவர்கள் கண்ணியத்துடனும், நிம்மதியாகவும் வாழ சமூக பாதுகாப்பு தரப்படுகிறதா என்பதுதான் நம் முன் உள்ள பிரச்னைகள்'' என்று அடைய வேண்டிய லட்சியங்களைப் பட்டியல் இடுகிறார்.

""மக்களுடைய பணத்தைச் செலவிடும் பொறுப்புள்ள நாம் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அரசுப் பணத்தை முறையாக, சரியாக செலவிட வேண்டும். நமது செயல்பாடுகள் வெளிப்படையாக, ஒளிவு மறைவு இல்லாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்'' என்று நிர்வாகத்திற்கு வழிகாட்டுகிறார்.

""சந்தையைக் கட்டுப்படுத்த ஆள் இல்லாவிட்டால் அது ஒரு நாள் கட்டுமீறிவிடும். பணக்காரர்களுக்கு மட்டும்தான் ஒரு நாடு என்றால் அது வளர்ச்சியடைய முடியாது. நமது பொருளாதார வெற்றி என்பது நாட்டின் இந்த வளர்ச்சியின் பயனை எல்லோருக்கும் கொடுப்பதில்தான் இருக்கிறது'' என்று தனது பொருளாதாரப் பார்வையை வெளிப்படுத்துகிறார்.

அண்ணல் காந்தியடிகள் சொன்ன அதே விஷயங்கள் இப்போது அமெரிக்க அதிபரால் வாஷிங்டனிலிருந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு கூறப்படுகிறது என்பதை எண்ணும்பொழுது அதிசயமும், ஆச்சரியமும் ஏற்படுவது நியாயம்தானே.!

அதிபர் பராக் ஒபாமா மாதா கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்து தன்னை ஒரு கிறிஸ்துவர் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட கையொடு, பதவிப் பிரமாணம் முடிந்து உரையாற்றுகிறார், ""கிறிஸ்தவர், இஸ்லாமியர், யூதர், இந்துக்கள் மற்றும் மதநம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடுதான் அமெரிக்கா. இதில் எந்த மதமும் ஏற்றத்தாழ்வுடையதல்ல'' என. இதைத் தானே 70 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அண்ணல் காந்தியடிகள் சொன்னார்.

பராக் ஒபாமாவின் வெற்றி கறுப்பர் இன மக்களின் வெற்றி என்று சொன்னால் அது தவறு. உண்மையில் இது இனவெறியை ஓரங்கட்டிய அமெரிக்காவின் வெற்றி. இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால், வெள்ளை இனத்தவர்களின் பெருந்தன்மைக்குக் கிடைத்த வெற்றி.

அமெரிக்க மக்கள் தொகையில் கறுப்பர் இனத்தவர் வெறும் 13.1 சதவீதம்தான். இவர்களது ஒட்டுமொத்த வாக்குகள்கூட பராக் ஒபாமாவை வெற்றியடைய வைத்திருக்காது.

அமெரிக்காவில் வாழும் வெள்ளையர்கள், ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்று விழைந்து மனமுவந்து வாக்களித்து ஒரு கறுப்பர் இனத்தவரை அதிபராக்கி இருக்கிறார்கள். தாங்கள் செய்த தவறை உணர்ந்து சரித்திரத்தை திருத்தி எழுத முற்பட்டிருக்கிறார்கள். இந்த விஷயத்திலும் அண்ணல் காந்தியடிகள்தான் முன்னோடி என்று எப்படி சொல்லாமல் இருப்பது?

காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களிடம் போய் அவர்களைப் போராடச் சொல்லவில்லை. உயர் சாதியினரிடம் தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜனங்கள், அதாவது கடவுளின் குழந்தைகள் என்று உணர்த்தினார். மனிதனை மனிதன் ஆண்டான், அடிமை என்று ஏற்றத்தாழ்வுடன் நடத்துவது தவறு என்று எடுத்துரைத்தார். நீங்கள் அவர்களை உங்களுக்கு சமமானவர்களாக நடத்துங்கள். நீங்கள் அவர்களைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போங்கள்' என்று கட்டளையிட்டார். தங்களை மேற்குடி என்று சொல்லிக் கொள்பவர்களின் சிந்தனையில் இருந்த சிலந்தி வலைகளை அகற்ற முற்பட்டார்.

மகாத்மா காந்தி என்கிற அந்த மாமனிதர் 70 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவை, தாழ்த்தப்பட்ட இனத்தவர்களே கொச்சைப்படுத்தாமல் இருந்திருந்தால், அவரது தொண்டர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசியல் நடத்தியவர்கள் இந்த விஷயத்தில் முனைப்புடன் சமுதாய உணர்வுடன் செயல்பட்டிருந்தால், அமெரிக்கா ஒரு பராக் ஒபாமாவை அதிபராகத் தேர்ந்தெடுத்திருப்பதைப்போல, இந்தியா எப்போதோ ஒரு ஹரிஜனத் தலைவரைத் தனது பிரதமராக்கி மனித இனத்துக்கு வழிகாட்டி இருக்கும்.

உலகின் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் இல்லாத அளவுக்கு அமெரிக்க அதிபருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. இரட்டை கோபுரமே தகர்க்கப்பட முடியும் என்று தீவிரவாதிகள் அமெரிக்க நிர்வாகத்துக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் சவால் விட்டு செயல்பட்டிருக்கிறார்கள்.

அப்படி ஒரு சூழ்நிலையில், 20 லட்சம் பேர் கூடியிருக்கும் திறந்தவெளியில், குண்டு துளைக்காத மேடையோ, சுற்றிலும் கறுப்பு, சிவப்பு, நீலம், சாம்பல் என்று கையில் துப்பாக்கி ஏந்திய பூனைப்படையினரோ இல்லாமல், துணிந்து பராக் ஒபாமா பதவி ஏற்கிறார், ஆச்சரியமாக இல்லை? சம்பிரதாயங்களை மீறி, திறந்தவெளியில் தைரியமாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதன் மூலம், அமெரிக்க மக்கள் மத்தியில் இருந்த பயத்தையும் பீதியையும் போக்கி அவர்களுக்கு தைரியத்தையும் உற்சாகத்தையும் அளித்திருக்கிறார் ஒபாமா.

அன்று நவகாளியில் சட்டை அணியாத திறந்த மார்புடன் தள்ளாத வயதில் தைரியமாக அண்ணல் காந்தியடிகள் நடந்த காட்சி நிழலாடுகிறது.

இது அண்ணல் காந்தியடிகள் கற்றுத் தந்த பாடமல்லவா? மக்களுக்காக நான் உயிரை விடவும் தயார் என்று சொல்லாமல் சொல்லி, அன்னிய ஏகாதிபத்தியத்தையே அச்சுறுத்திய அண்ணலில் வழித்தோன்றல்கள் இப்போது கறுப்புப்பூனைகளை அங்கீகாரமாகவும், தங்களது தகுதியின் அடையாளமாகவும் கருதுகிறார்களே, அதை யாரிடம் சொல்லி அழ?

நாம் வேண்டுமானால் மகாத்மா காந்தியை மறந்திருக்கலாம். ஆனால் உலகம் மறக்கவில்லை. நாம் அண்ணல் காந்தியடிகள் வகுத்துத்தந்த பாதையையும் அவரது வழிகாட்டுதல்களையும் மறந்திருக்கலாம். ஆனால், 70 ஆண்டுகளுக்கு முன்னால் காந்தியடிகள் கண்ட கனவு நனவாகி இருக்கிறது.

"முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மையுற்றாய்!' என்று மகாகவி பாரதி போற்றிய அண்ணல் காந்தியடிகளின் கனவு நனவாகி இருக்கிறது- இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில்!

Tuesday, January 20, 2009

தடை நீடிக்குமா? விலகுமா? கொ. காளீஸ்வரன் Thanks to Dinamani

தடை நீடிக்குமா? விலகுமா?

கொ. காளீஸ்வரன்

போதை தலைக்கு ஏறும் குணமுள்ள ஏராளமான மதுபான வகைகள் தாராளமாக விற்பனையாகும் தமிழகத்தில், ஏழை விவசாயிகள் விரும்பிப் பருகும் இயற்கை பானமான "கள்ளு'க்கு கடந்த 21 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது நியாயமா? என, தமிழ்நாடு கள் இயக்கம் தற்போது உரக்க கேள்வி எழுப்பி வருகிறது.

எனவே இத்தடையைக் கண்டித்தும், கள்ளை மதுபானப் பட்டியலில் இருந்து நீக்கி, இயற்கை உணவுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் பல விவசாயிகள் அமைப்புகளை உள்ளடக்கிய இந்த இயக்கம் சார்பில் நாளை (ஜன.21) தமிழகம் முழுவதும் "கள் இறக்கும் போராட்டம்' அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 1.1.1987-ல் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளில் குறைவான அளவே போதை இருப்பதால், போதை அதிகரிக்க "குளோரல் ஹைட்ரேட்' கலக்கப்பட்டு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இது உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும். மேலும், இதைக் குடிக்கும்பட்சத்தில் உயிரிழப்புக்கும் வழிவகுக்கும் என்பதால் பொதுநலன் கருதி இந்தத் தடையை விதிப்பதாக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

21 ஆண்டுகளாக நீடிக்கும் இத்தடையால் சுமார் 10 லட்சம் தொழிலாளர் குடும்பங்களுக்கு வேலையிழப்பும், 50 லட்சம் வேளாண் குடும்பங்களுக்குக் கூடுதல் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. சுமார் 12,000 பனை மற்றும் தென்னைத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என, கள் இறக்குவதை ஆதரிக்கும் அமைப்புகள் புள்ளிவிவரங்களைத் தெரிவித்து வருகின்றன.

மேலும், இந்தியாவில் உள்ள 8 கோடி பனை மரங்களில் தமிழகத்தில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளதாகவும், கள் தடை செய்யப்பட்டுள்ளதால் இவற்றில் பெரும்பாலான பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கு எரிக்கப்படும் பொருளாகவே பயன்பட்டு வருவதாகவும் அந்த அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

இந்தத் தடை காரணமாக பல கிராமங்களைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் திருப்பூர், ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிழைப்புத் தேடிச் சென்றுவிட்டனர் என்பதையும் மறுக்கமுடியாது.

பனை, தென்னை பூக்களில் வடியும் சுவை நீர் புளித்துப் போனால் கள்ளாக மாறி விடுகிறது. மேலும், தாய்ப்பாலில் உள்ள "லோரிக் அமிலம்' கள்ளில் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் 42.8 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள போதை தரும் மதுபானங்கள் தங்கு தடையின்றி "குடி குடியைக் கெடுக்கும்; உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும்' என்ற எச்சரிக்கை வாசகங்களோடு அரசே விற்பனை செய்து, அன்றாட வருமானம் ஈட்டும் ஏழைகளை போதைக்கு அடிமையாக்கி வருவது மட்டும் நியாயமா?

2008-2009-ம் ஆண்டில் அரசு மதுபானங்களின் விற்பனை இலக்கு ரூ. 13,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபான விற்பனையில் பெருமளவில் கிடைக்கும் வருவாயை விட்டுக்கொடுக்க அரசு முன்வராததே, கள் தடைக்கு பிரதான காரணம். மேலும், மதுபான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோர் இந்தத் தடையை நீட்டிக்க அரசை நிர்பந்தித்து வருகின்றனர் எனவும் தமிழ்நாடு கள் இயக்கம் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளது.

வருமானம் குறைந்தால் ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டி.வி., கேஸ் அடுப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து வழங்குவது சாத்தியமா என்ற கேள்வியும் இன்றைய ஆளும் அரசின் கண்முன் நின்றுகொண்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

இன்று சந்தையில் கிடைக்கும் வெளிநாட்டு "மென்பானங்களுக்கு' போட்டியாக பதனீர், கள்ளை சுவை நீராக சந்தைப்படுத்த நடவடிக்கை எடுத்தால் கிராம பொருளாதாரம் வளர்ச்சியுறும். இதற்கு வேளாண் வல்லுநர்கள், அறிவியல் அறிஞர்களின் முழு ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதிக எண்ணிக்கையில் பனை மரங்களை கொண்ட தமிழகத்தில் மட்டும் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயம் என்று கேட்கும் ஆயிரக்கணக்கான பனை மற்றும் தென்னை தொழிலாளர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

பாராமுகம் ஏனம்மா? பழ. நெடுமாறன் Thanks to Dinamani

பாராமுகம் ஏனம்மா?

பழ. நெடுமாறன்

மதிப்பிற்குரிய சோனியா காந்தி அவர்களே! உங்களுடைய மாமியாரும் மறைந்த பிரதமருமான இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாகவும் அவரின் முழுமையான நம்பிக்கை பெற்றவனாகவும் இருந்த ஒரு தமிழன் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

காங்கிரஸ் இயக்கத்திற்கு ஒரு தியாகப் பாரம்பரியம் உண்டு. அன்னியரின் அடிமைத்தளையிலிருந்து இந்தியாவை விடுவிக்கப் போராடி பல தியாகங்களைச் செய்த இயக்கம் காங்கிரஸ் இயக்கமாகும். இமயம் முதல் குமரி வரை வாழும் பல மொழி பேசும் தேசிய இனங்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இயக்கம் அதுவாகும்.

மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என நான்கு தலைமுறையினர் காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி உள்ளனர். அவர்கள் இருந்த நாற்காலியை இன்று நீங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சுதந்திர இந்தியாவின் பிரதமர்களாக உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் 37 ஆண்டு காலமாகப் பதவி வகித்து உள்ளனர். நேருவின் குடும்பம் நாட்டுக்குச் செய்த தியாகத்தை மதித்து மக்கள் அளித்த பரிசு இதுவாகும்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சி ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளில் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவு தந்தது. நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது உலகெங்கும் நடைபெற்ற தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கு முழுமையாக ஆதரவு தந்தார்கள். ஆனால், அவர்கள் வழி நடத்திய கட்சிக்குத் தலைவராக விளங்கும் நீங்கள் அண்டை நாடான இலங்கையில் தமிழ்த் தேசிய இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதற்கு மெüன சாட்சியாக விளங்குவது காலத்தின் கோலம்தான்.

இந்திராகாந்தி பதவியில் இருந்த காலத்திலும் பதவியில் இல்லாத காலத்திலும் ஈழத்தமிழர் பிரச்னையில் கையாண்ட அணுகுமுறைகளை இன்றைக்கும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

1977-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்று இந்திரா பதவியை இழந்திருந்த நேரம் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அ. அமிர்தலிங்கம் சென்னைக்கு வந்து இங்குள்ள அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்துத் தங்கள் பிரச்னைக்கு ஆதரவு திரட்டினார். அப்போது தமிழ்நாடு காங்கிரசின் பொதுச் செயலாளராக நான் இருந்தேன். என்னையும் அவர் சந்திக்க விரும்பியபோது உடனடியாக சென்று சந்தித்தேன். ஈழத்தமிழர் பிரச்னை குறித்து விரிவாக எனக்கு எடுத்துக் கூறினார். அப்போது நான் அவரிடம் ""நாங்களும் தமிழர்கள் என்ற முறையில் முற்றிலுமாக உங்களை ஆதரிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் எங்கள் கையில் எந்த அதிகாரமும் இல்லை. எனவே நீங்கள் தில்லிக்குச் சென்று அகில இந்தியத் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவது நல்ல விளைவைத் தரும்'' என்று கூறினேன்.

தில்லியில் யாரையும் தனக்குத் தெரியாததால் அதற்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டபோது நானும் சம்மதித்தேன். உடனடியாக இந்திராகாந்தியிடம் தொடர்பு கொண்டு பேசி அவரது ஒப்புதலையும் பெற்றேன். பின்னர் அவர் குறிப்பிட்ட தேதியில் அமிர்தலிங்கம் தம்பதியினரை தில்லிக்கு அழைத்துச் சென்று இந்திராவைச் சந்திக்க வைத்தேன். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் அமிர்தலிங்கம் கூறியவற்றுக்குப் பொறுமையாக செவி சாய்த்த இந்திரா, அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். சர்வதேச ரீதியில் ஈழத்தமிழர் பிரச்னைக்கு ஆதரவு திரட்டுவது முக்கியம் என்று கூறியதோடு முக்கிய நாடுகளில் யார் யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார். சர்வதேச ஆதரவு திரளும்போது இந்தியா தலையிடுவது எளிதாகும். அதற்கு முன்பாக தலையிட்டால் பெரிய நாடான இந்தியா சிறிய நாடான இலங்கையை மிரட்டுகிறது என்ற குற்றச்சாட்டு எழும். எனவே அதற்கு இடமளிக்காத வகையில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தையெல்லாம் தெளிவாக எடுத்துக் கூறினார். ஒரு பேராசிரியை மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது போல அவர் அன்று கூறியதையெல்லாம் அமிர்தலிங்கம் குறிப்பெடுத்துக் கொண்டார்.

பிறகு என்னை அழைத்து அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அமிர்தலிங்கத்தை அதில் பேச வைக்க வேண்டும், அதற்கானவற்றை உடனடியாகச் செய்யும்படி அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ஏ.ஆர். அந்துலேவிடம் கூறும்படி பணித்தார்.

அன்றுமாலை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல தலைவர்கள் பங்கேற்றனர். தங்கள் பிரச்னையை விளக்கி அமிர்தலிங்கம் முதலில் பேசினார். பிறகு பல தலைவர்களும் பல கேள்விகளைக் கேட்டனர். எல்லாவற்றிற்கும் அமிர்தலிங்கம் திருப்திகரமான பதிலை அளித்தார். நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஒய்.பி. சவான் கேட்ட கேள்வி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

""நீங்கள் இந்தியாவிலிருந்து சென்று குடியேறியவர்கள் அங்கே போய் தனிநாடு கேட்பது எந்த வகையில் நியாயமானது?'' என அவர் கேட்டார். இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் அவர் கேட்டதற்கு அமிர்தலிங்கம் தக்க விடையளித்தார்.

பின்னர் இரவில் இந்திராவைச் சந்தித்து நடந்த விவரங்களை நான் தெரிவித்தேன். சவான் கேட்ட கேள்வியை கூறிவிட்டு அண்டை நாட்டின் பிரச்னை பற்றியே சரியாகத் தெரிந்து கொள்ளாத இவரை வெளிநாட்டு அமைச்சராக வைத்திருந்தீர்களே எனக் கேட்டபோது இந்திரா வாய்விட்டுச் சிரித்ததை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.

பயிற்சி பெற்ற இந்தப் போராளிகளைக் கொண்டு சிங்கள அரசுக்குப் பாடம் கற்பிக்க அவர் திட்டமிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதன் விளைவாக வேண்டாத விளைவுகள் பிற்காலத்தில் ஏற்பட்டுவிட்டன.

இந்திரா காலத்தில் இந்திய மண்ணில் ஈழப்போராளிகளின் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழக அரசோ இந்திய அரசோ அவற்றைத் தடை செய்யவில்லை. ஆனால் இன்று என்ன நடக்கிறது? ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளித் தருகிறது. ஆலோசனை வழங்க ராணுவ அதிகாரிகளை அனுப்புகிறது. இலங்கையில் நடைபெறும் போரைப் பின் நின்று நடத்துவது இந்திய அரசுதான் என்பது அம்பலமாகியிருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்திராவுக்கு தொலைநோக்குப் பார்வை இருந்தது. இந்தியாவின் அருகில் தெற்கே இருக்கக்கூடிய இலங்கை நாட்டில் எந்த அன்னிய வல்லரசும் நுழைவது இந்தியாவின் பாதுகாப்புக்குப் பேரழிவைத் தரும் என்பதை இந்திரா தெளிவாக உணர்ந்து இருந்தார். அதற்கு ஏற்பத் தனது இலங்கை அணுகுமுறையை அமைத்துக் கொண்டார்.

இந்தியாவிற்கு எதிராகப் பாகிஸ்தானை ராணுவ ரீதியில் வலிமையாக்க அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுதங்களை அள்ளி அள்ளித் தந்தது. பிரதமர் நேரு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது அந்த ஆயுதங்கள் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற வாக்குறுதியை அமெரிக்கா அளித்தது. ஆனால் என்ன நடந்தது? இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஐந்து முறைகள் நடைபெற்ற போர்களில் அமெரிக்க ஆயுதங்கள் இந்தியாவிற்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட்டன. இந்த உண்மையை சோனியாகாந்தியே நினைத்துப் பாருங்கள்.

இன்று பாகிஸ்தான் வழியாக இலங்கையில் குவிக்கப்படும் அமெரிக்க ஆயுதங்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல அவர்களை ஒழித்துக்கட்டிய பிறகு, இந்தியாவை மிரட்டுவதற்குப் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு முன்னோட்டம்தான் இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை குறிவைத்துச் சுடுவதாகும்.

உங்களால் நியமிக்கப்பட்ட பிரதமர் மன்மோகனுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. அவர் அரசின் உயர் அதிகாரிகளான எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன் போன்றோர்களுக்கு தொலைநோக்குப் பார்வையும் இல்லை, மனிதநேயமும் இல்லை. இத்தகைய அதிகாரிகளின் தவறான ஆலோசனைகளின் பேரில் பிரதமர் மன்மோகன் வழிநடத்தப்படுகிறார். இந்தியாவின் தென்பகுதியில் எதிர்காலத்தில் வரப்போகும் அபாயத்தை பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் அங்கு காலூன்றிவரும் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் திட்டங்கள் குறித்தும் கவலையில்லாமல் இவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் கொலை வெறிக்குத் துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அப்பாவி அரபிய மக்களை இஸ்ரேலியர் கொன்று குவிப்பதற்கு எதிராக நீங்களும் உங்களின் பிரதமரும் கண்டன அறிக்கைகளை கொடுத்துள்ளீர்கள். அதை நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன். ஆனால் மிக அருகே இருக்கக்கூடிய ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் கவலை இல்லையே ஏன்? இந்தக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலை பொறுத்துத்தான் தமிழகத்தில் உங்கள் கட்சியின் எதிர்காலம் அமையும்.

தங்களின் கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது ஒரு துன்பியல் நிகழ்வு என்பதில் ஐயமில்லை. இந்திராவோடு மிக நெருங்கிப் பழகிய எனக்கு அது தீராத மனவலியை அளித்தது. அதேவேளையில் இன்னொன்றையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர எண்ணுகிறேன். ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது உடனிருந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே ஏதோ ஒரு சாக்குச் சொல்லி அங்கிருந்து நழுவி விட்டார்களே ஏன் என்பதனை நீங்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா? உங்கள் கட்சியைச் சேராதவரும் தோழமைக் கட்சியைச் சேர்ந்தவருமான தா. பாண்டியன் படுகாயம் அடைந்து பல மாதங்கள் மருத்துவமனையில் கிடந்தாரே, இன்னமும் அவரது உடலில் குண்டுத் துணுக்குகள் பதிந்துள்ளனவே. அத்தகைய ஒருவரே ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதற்குக் குரல் கொடுக்கிறார். ஆனால் தங்கள் கணவர் ராஜீவின் உயிரை விடத் தங்கள் உயிரைப் பெரிதாக நினைத்து ஓடி ஒளிந்துகொண்ட தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களின் வார்த்தைகளை நம்பி நீங்கள் செயல்படுவது சரிதானா?

1978-ம் ஆண்டு மதுரைக்கு வந்த இந்திராவைச் சூழ்ந்துகொண்டு திமுகவினர் பயங்கர ஆயுதங்களால் தாக்கியபோது அவர் மீது ஓர் அடியும் விழாமல் பாதுகாத்தவன் நான் என்பதை நீங்கள் அறிவீர்கள். தலைவரின் உயிருக்கு ஆபத்து வரும்போது தன் உயிரைக் கொடுத்தாவது தலைவரின் உயிரைக் காப்பாற்றுவது ஓர் உண்மைத் தொண்டனின் கடமையாகும். ஆனால் தங்கள் கணவர் ராஜீவைச் சூழ்ந்து வந்த காங்கிரஸ் தலைவர்கள் குண்டுவெடிப்பின்போது மட்டும் மாயமாய் மறைந்து போனார்களே. அவர்கள் யார் என்று நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும். அவர்களின் வார்த்தைகளை நம்பி ஈழத்தமிழர்களின் பிரச்னையில் தவறாகச் செயல்பட வேண்டாமென உங்களை நான் மீண்டும் மீண்டும் வேண்டிக்கொள்கிறேன்.

ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் நால்வரின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டபோது, அந்த இளைஞர்களுக்குக் கருணை காட்டும்படி நானும் மற்ற நண்பர்களும் உங்களுக்கு விடுத்த வேண்டுகோளை மதித்து அவர்களுக்குக் கருணை காட்டும்வகையில் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தீர்கள். அதற்காக நானும் மற்ற நண்பர்களும் தில்லியில் உங்களைச் சந்தித்து நன்றி கூறினோம்.

அந்தப் பெருந்தன்மையான உள்ளம் உங்களிடம் நிறையவே உள்ளது. சீக்கியர்களின் பொற்கோவிலுக்குச் சென்று சீக்கிய சமுதாயத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டீர்கள். இந்திராவின் படுகொலையை ஒட்டி நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டீர்கள். இந்தப் பேருள்ளத்தை சீக்கிய சமூகம் பாராட்டியது. அதே சமூகத்தை சேர்ந்த ஒருவரைப் பிரதமர் நாற்காலியில் அமர வைத்து உள்ளீர்கள். இப்படியெல்லாம் நல்லெண்ணச் சமிக்ஞையைக் காட்டும் நீங்கள், ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மட்டும் ஏன் பாராமுகம் காட்டுகிறீர்கள்?

சிங்கள வல்லரக்கர்களால் தினமும் கொன்று குவிக்கப்படும் எங்கள் சகோதரர்களின் பிரச்னையில் தலையிட்டு அவர்களைக் காப்பாற்ற முயற்சி எடுங்கள். இந்திரா காந்தியால் மகனே என அழைக்கப்பட்ட ஒருவன் எழுதும் இந்த கடிதத்திற்கு உரிய மதிப்புக் கொடுத்து இலங்கை பற்றிய தங்களின் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யும்படி தங்களை வேண்டிக் கொள்கிறேன்.

Tuesday, January 13, 2009

ஆண்ட இனம் அழியலாமா? Thanks to Dinamani

ஆண்ட இனம் அழியலாமா? Thanks to Dinamani

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

வரலாற்றில் முதல், இடைத் தமிழ்ச்சங்கங்கள், கபாடபுரம், லெமூரியா கண்டம் அழிந்துவிட்டன என்றும், அதன் எச்சமாக தற்போது இலங்கைத் தீவு உள்ளது என்றும், எனவே இலங்கைத் தீவு தமிழ் மண்தான் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே யாழ்ப்பாண தமிழ் அரசுகள் அங்கு சேது நாணயம், நந்திக் கொடி கொண்டு சிறப்பாக ஆட்சி நடத்தின என்பது வரலாற்று உண்மை.

கலிங்கப் போருக்குப் பின் அசோகர் பௌத்த மதத்தைத் தழுவினார். மகேந்திரன் தலைமையில் பௌத்த குழுவை இலங்கைக்கு அனுப்பினார். அனுராதபுரத்தில், திஸô என்ற மன்னன் ஆட்சியில் மகேந்திரர் குழு அங்கு பௌத்த போதனைகளைப் போதித்தபின் பௌத்த மதம் அங்கு வந்தது என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்தனர் என்பதுதான் வரலாற்று உண்மை. இப்படியெல்லாம் ஆண்ட தமிழினம் இன்று இனப் பாகுபாடு காரணமாக அழிவில் உள்ளது.

போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர் ஆட்சிகள் முடிவுக்கு வந்தபின் தமிழர்களின் பூர்வகுடியின் அடையாளங்களைத் திட்டமிட்டு ஒதுக்கி சிங்கள ஆட்சிகள் தமிழின அழிப்பு வேலைகளில் இறங்கின.

இலங்கையில் 1948-ல் ஆங்கிலேயர் வெளியேறிய பின் 1949-ல் குடியுரிமைச் சட்டம், 1956-ல் தனிச் சிங்களச் சட்டம், 1972-ல் அரச மதவாதச் சட்டம் எனக் கொடிய சட்டங்களைக் கொண்டு வந்து சிங்கள அரசு தமிழர்க்கு எதிராக நடந்து கொண்டது. தமிழர்கள், சிங்கள அரசுக்கு எதிராகப் போராடினரே தவிர, தனிப்பட்ட சிங்களவரை எதிர்த்துப் போராடவில்லை. ஆனால், சிங்களத்தவர்களோ தமிழர்களை விரோதியாகக் கருதினர். தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றுதான் போராடினார்கள் என்பதுதான் உண்மை.

இனம், நிறம், மொழி, மதம், கலாசாரம், பழக்கவழக்கங்கள், அரசியல் நிலைப்பாடுகள், தாய் மண், பிறப்பு என்ற நிலையில் உரிமைகளைப் பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்று ஐ.நா. மன்றத்தின் பிரகடனம் 1948-ல் நடைமுறைக்கு வந்தது. மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டுதான் தேசிய இனங்கள் வகுக்கப்படுகின்றன. அந்நிலையில் ஈழத்தில் வாழும் தமிழர்களும் ஓர் இனம்.

1990-ம் ஆண்டுக்குப் பின்பு வரை உலகளவில் 23 தேசிய இனங்கள் பிரிந்து தங்களுக்கான அரசுகளை அமைத்துக் கொண்டுள்ளன. இவை பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தன்னாட்சி சுய உரிமை உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயங்கள் ஆகும். 1775-ல் நடைபெற்ற அமெரிக்க விடுதலைப் போரும், 1789-ல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியும் இன்றைக்கும் வரலாற்றில் பேசப்படுகின்றன. இப்போராட்டங்கள் யாவும் தன்னாட்சி உரிமைக்கு வித்திட்டவையாகும். ஆதிக்கம், அடிமைத்தனம், பாசிசம் என்ற நிலையில் இன வேற்றுமை பார்க்கும்போது புரட்சி, சுய நிர்ணயம், விடுதலை என்ற தாகம் ஏற்படுகிறது.

இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தும், ரஷியாவிலிருந்து போலந்தும், பின்லாந்தும், சுவீடனிலிருந்து நார்வேயும் தன்னாட்சி உரிமை பெற்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தேசிய இனம் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டி வெற்றி பெறும்பொழுதுதான் அங்கு ஜனநாயகமும், மக்கள் ஆட்சியும் மலரும்.

உலக அளவில் இதுபோன்று தேசிய இனங்கள் பிரிந்து பல தனி நாடுகள் தோன்றியுள்ளன. வங்கதேசம், செக்கோஸ்லேவேகியாவிலிருந்து செக், ஸ்லோவியா என இரு நாடுகளும், யூகோஸ்லேவியாவிலிருந்து போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா, செர்பியா, குரோஷியா, மாண்டெனெக்ரோ, மாசிடோனியா, சுலவேனியா என ஆறு நாடுகள் தங்களது தேசிய இனத்தின் பிரச்னைகளைக் கொண்டு சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டின.

அதேபோல கொசாவா போராட்டம் 27 ஆண்டுகள் நடைபெற்று தனி நாடாகியது. அல்பேனியா எழுச்சியும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. கிழக்கு தைமூரும் தங்கள் தேசிய இனப் போராட்டத்தில் வெற்றி கொண்டு தங்களின் இறையாண்மையை நிலைநாட்டியது. பாலஸ்தீனப் போராட்டம் இன்றும் உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உலகில் பல இனங்கள் தங்களுடைய தேசிய இனத்தைத் தற்காத்துக் கொள்ளப் போராடி வெற்றி கண்டுள்ளன. அதே பாதையில்தான் இலங்கையிலும் தமிழ் இன மக்கள் போராடி வருகின்றனர். கடந்தகால துன்பியல் பிரச்னைகளைக் கொண்டு தொடர்ந்து ஈழப் பிரச்னை தீண்டப்படாத பிரச்னை என நினைப்பது மனித நாகரிகத்துக்கும் இயற்கையின் நீதிக்கும் புறம்பானது ஆகும்.

இந்திய மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமலே இந்திய அரசு இலங்கைவாழ் தமிழர்களைக் கொல்ல அனைத்து உதவிகளைச் செய்வது மட்டுமல்லாமல், நாம் கொடுக்கும் வரிப் பணத்திலிருந்து பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் வாங்கக் கடன் கொடுப்பதில் என்ன நியாயம் உள்ளது?

இலங்கையில் ஆளும் ராஜபக்ஷ அரசு, மைனாரிட்டியாக இருந்து 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதால் அரசாங்கத்தை அமைத்துள்ளது. அப்படிப்பட்ட ராஜபக்ஷவுக்கு இந்திய அரசு ஆதரவு தருகிறது என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. 225 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 112 பேர் அமைச்சர்கள். இப்படி துக்ளக் தர்பார் இலங்கையில் நடக்கிறது. ராஜபக்ஷ அமைத்துள்ள குழுவில் தமிழ் எம்.பி.க்கள் யாரும் இடம் பெறவில்லை. இதெல்லாம் தெரிந்திருந்தும் ராஜபக்ஷ தலைமையிலான சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஏன் முழு ஒத்துழைப்பும் கொடுக்கிறது என்பதுதான் புதிராக இருக்கிறது.

இலங்கையில் தமிழ்க் கலாசாரச் சுவடுகளையே ராஜபக்ஷ அரசு அகற்றி வருகிறது. அங்குள்ள தமிழர் நாகரிகத்தைப் பற்றிய இந்திய - இலங்கைத் தொடர்பு, அங்குள்ள தமிழர் நாகரிகத்தைப் பற்றிய அகழ்வாராய்ச்சி சான்றுகள், செப்பேடுகள், பெருவழுதியின் சங்க கால நாணயங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. காரை நகர், கந்தரோடை, அனுராதபுரம் என்று பரவலாக இலங்கையில் உள்ள 26 இடங்களில் தமிழ்க் கலாசார நாகரிகம் புழங்கிய அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன.

இதற்குக் காரணம் என்னவெனில், தமிழன் அங்கு பூர்வீகக் குடிமகன் என்று சொல்லக் கூடாது; அதற்கான அடையாளங்கள் கண்ணில் படக்கூடாது என்று ராஜபக்ஷ அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது.

இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவுவதற்காக, 225 ராணுவ அதிகாரிகளை அங்கே அனுப்பியது ஏன்? நவீன ராடார்களும், ரூ. 400 கோடி கடனும் கொடுத்து உதவுவது யாரைக் கொல்ல? இதுவரை சிங்கள ராணுவத்தினர் 65,390 பேருக்கு இந்தியா பயிற்சி அளித்துள்ளது என்று கூறப்படுகிறது. அங்கே என்ன வேறு நாடுகளின் படையெடுப்பா நடக்கிறது, ராணுவப் பயிற்சி அளிக்க? நம்மவர்களை அழிக்க நாமே உதவி செய்வதா? இது என்ன அநியாயம்?

அங்கு ஒரு தேசிய இனம் தனது உரிமைக்காகப் போராடுகிறது. சிங்களப் பேரின வாதம் இனப் படுகொலையைத் திட்டமிட்டுச் செய்து வருகிறது. அதைக் கண்டிக்காமல் இலங்கைக்கு உதவுவது கொடுமையிலும் கொடுமை. இதில் உள்ள நியாயங்களை எடுத்துச் சொன்னால் தீவிரவாதிகளுக்கு ஆதரவு என்று ஒரு தவறான வாதம் வைக்கப்படுகிறது.

1948-ல் இலங்கை விடுதலை பெறும்போது அங்குள்ள தமிழர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். இந்தியாவில் முஸ்லிம்கள் பாகிஸ்தான் கேட்டதுபோலத் தமிழர்களும் கேட்டிருந்தால், அப்போதே தனி ஈழம் உருவாகி இருக்கும். ஆனால் தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பினர். அதுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு.

இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா தலையிட்டது எப்படி? அதில் என்ன நியாயம் இருந்தது? தங்ஹள்ர்ய்ஹbப்ங் ஹஞ்ஞ்ழ்ங்ள்ள்ண்ர்ய் என்பது பன்னாட்டுச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். இவையெல்லாம் தெரிந்திருந்தும் மத்திய அரசு பாராமுகமாக இருப்பது மட்டுமல்லாமல், இலங்கை அரசின் இனப்படுகொலைக்குத் துணைபோகிறதே, அது ஏன்? என்பதுதான் புதிராக இருக்கிறது.

ஈழத் தமிழர்க்கு மத்தளத்தின் இரண்டு பக்கம் போன்று சிங்கள அரசு இவர்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்றும், இந்திய அரசோ இவர்களைத் தீவிரவாதிகள் என்றும் கைகோர்த்துக் கொண்டு அழிக்க முற்பட்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை. இதன் விளைவாக ஒரு இனமல்லவா அழிக்கப்படுகிறது? அகிம்சையை உலகுக்கு போதித்த பாரத பூமி ஒரு இனப்படுகொலைக்கா துணை நிற்பது?

எப்படி வங்கதேசம் தன்னுடைய உரிமைகளைப் பெற தனிநாடு கண்டதோ அதேபோன்று ஈழத் தமிழர்கள் தங்களது பூர்வீக மண்ணில் தங்களுடைய இறையாண்மையை நிலைநாட்டப் போராடுகின்றனர். அவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டுக் கண்ணைக் கட்டிக் கொண்டு காரணம் இல்லாமல் ஈழத்தில் வாழும் தமிழர்களை அழிக்க இந்திய அரசு சிங்களவருக்குத் துணை போவதை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது

தேய்கிறது சந்தனம்! Thanks to Dinamani

தேய்கிறது சந்தனம்! Thanks to Dinamani

சந்தன மரங்கள் எண்ணிக்கையில் குறைந்து போனதற்கு கடத்தல்காரர்கள் மட்டுமே காரணமல்ல; முதல் காரணம் அரசுதான்.

திப்பு சுல்தான் காலத்தில்தான் சந்தன வணிகம் அரசு மட்டுமே செய்யக்கூடியதாகவும் சந்தன மரங்கள் அரசின் சொத்துகளாகவும் மாறியது. அந்தநாள் முதலாகவே சந்தனத்துக்கு அதிக விலை கிடைக்கும் காரணத்தால் அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு சந்தன மரங்களைக் கடத்தும் சட்டவிரோத வணிகம் நடக்கத் தொடங்கியது. இந்தி
Save Now
யா விடுதலை பெற்ற பின்னர், அரசு அதிகாரிகளைக் கைக்குள் போடுவது ஒரு பொருட்டே அல்ல என்ற நிலையில், சந்தனம் வேகமாகக் கரைந்துபோகத் தொடங்கியது.

இப்போதாகிலும் சந்தன மரத்தை அரசின் பிடியிலிருந்து விடுவிப்பார்களா என்று எதிர்பார்த்தால், அதற்கான வாய்ப்பே இல்லையோ என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது அரசின் விதிமுறைகள்.

தற்போது அமலுக்கு வந்துள்ள தமிழ்நாடு பட்டா நிலங்களில் சந்தன மரங்கள் வளர்ப்புச் சட்டம் 2008-ன் படி சந்தன மரத்தை யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம் என்று சொல்கிறது. ஆனாலும் திப்பு சுல்தான் காலத்தில் எப்படி ஒரு வரியில் சந்தன மரம் அரசுக்குச் சொந்தம் என்பது உறுதிப்படுத்தப்பட்டதோ அதே விஷயத்தை தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதாக இருக்கிறது இந்த புதிய சட்டமும்.

சந்தன மரம் வளர்க்க விரும்புவோர் தன் பெயரில் பட்டா உள்ளதை நிரூபித்து, மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற்று சந்தன மரங்களை வளர்க்க வேண்டும். வனச்சரகர் வந்து மரங்களை ஆய்வு செய்வார். வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள மாவட்டக் குழுவின் சம்மதத்துடன் இந்த சந்தன மரங்களை வனத்துறையே வெட்டி எடுத்துச் செல்லும். மரத்தின் தரத்துக்கு ஏற்ப சந்தை விலை நிர்ணயிக்கப்படும். மரத்தை வெட்டி எடுத்துச் சென்றது மற்றும் இதர செலவுகளுக்காக மரத்தின் மொத்த மதிப்பில் 20 சதவீதத்தை அரசு பிடித்தம் செய்து கொண்டு மீதித் தொகையை 90 நாள்களுக்குள் உரிமையாளருக்கு வழங்கும். இத்தனை நடைமுறைகளும் முடிந்து பணம் கைக்கு வரும்போது கைகளில் சந்தனம் மணக்கிறதோ இல்லையோ லஞ்சம் மணக்கும் என்பது ஊரறிந்த உண்மை.

இதில் சொல்லப்படாத தகவல் ஒன்று: இதனிடையே சந்தன மரத்தை யாராகிலும் வெட்டி எடுத்துச் சென்றுவிட்டால், "இதை நான் வெட்டவில்லை; உண்மையிலேயே திருடுபோனது' என்பதை நிரூபிப்பதற்கு மரம் வளர்த்தவர் படாதபாடு படவேண்டும்.

எதற்காக இத்தனை நிபந்தனைகள்? இதனால் யாரை ஊக்குவிக்க முடியும்? இந்த நிபந்தனை மரத்தை வளர்ப்பதற்கா, வளர்க்காமல் தவிர்ப்பதற்கா?

இந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு மூன்று எல்லைகளும் இணைந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில்தான் சந்தன மரங்கள் மிகுதியாக இருந்தன. இப்போது குறைந்துவிட்டன. அப்பகுதிகளில் சந்தன மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டங்களை மாநில அரசுகள் செய்து வருகின்றன.

தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு மாவட்டங்கள் சந்தன மர வளர்ப்புக்கு ஏற்ற பகுதிகள். யார் வேண்டுமானாலும் சந்தன மரங்களை வளர்க்கலாம்; அந்த மரங்களை வெட்டிக் கொண்டுவந்தால் அதன் எண்ணெய் தரத்துக்கு ஏற்ப அரசு விலை கொடுக்கும் என்று விதிமுறைகளை எளிமையாக்கினால், இந்த நான்கு மாவட்டங்களிலும் முருங்கை மரம் போல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சந்தன மரம் வளர்ப்பார்கள். பணத்தேவை ஏற்படும்போது அதை வெட்டிக் கொண்டுபோய் அரசுக் கிடங்கில் எடைக்குப் போட்டு பணம் பார்ப்பார்கள்.

ஆனால், சந்தன மரம் வீட்டில் வெட்டப்பட்டதா, காட்டில் வெட்டப்பட்டதா என்று வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்பதற்காக இந்த நிபந்தனைகள் என்கிறார்கள். காட்டில் உள்ள சந்தன மரங்களை காப்பாற்ற வேண்டியது வனத்துறையின் பொறுப்பு. தங்கள் கடமையை எளிமையாகச் செய்வதற்குத்தான் இத்தனை நிபந்தனைகளே தவிர, சந்தன மரம் பற்றிய கவலைகள் இந்த அதிகாரிகளுக்குக் கிடையாது.

நாம் இத்தனை கட்டுப்பாடுகள் விதித்து சந்தன மரம் வளர்ப்பதற்கு தடைகள் போடும் வேளையில், இந்திய சந்தன மரக்கன்றுகளை கொண்டுசென்ற ஆஸ்திரேலியா மிகப் பெரிய அளவில் சந்தனத் தோட்டங்களை குனன்னுரா என்ற இடத்தில் அமைத்துள்ளது. உலகில் இந்திய சந்தன எண்ணெய்க்கு விலை அதிகம். ""2023ம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு 130 டன் சந்தன எண்ணெய்யை விற்பனைக்கு கொண்டுவருவோம்'' என்று அறுதியிட்டுச் சொல்கிறது ஆஸ்திரேலியாவின் ஊரக தொழில்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்.

ஆனால் இந்தியாவிலோ, காட்டில் உள்ள சந்தன மரங்களையும் வனத்துறையினர் பொறுப்புடன் பாதுகாக்க மாட்டார்கள். மக்கள் தங்கள் விருப்பத்துக்கு வளர்க்கவும் விடமாட்டார்கள். நிலைமை இப்படியாக நீடித்தால், சந்தனத்தை கால்நூற்றாண்டுக்குப் பின்னர் நாமும் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

இந்திய அரசின் பதில் என்ன? Thanks to Dinamani

இந்திய அரசின் பதில் என்ன?

சி. மகேந்திரன்

கிளிநொச்சி வீழ்ந்ததைப் பற்றியும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிடிபடப் போகிறார் என்பதைப் பற்றியும் பரபரப்பாக பேசுவதை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு, யுத்தத்தின் மறுபக்கத்தை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது அவசியமானதாகும். போரில் நேரடியாக ஈடுபடுபவர்களை விட பொது மக்கள் அடையும் துயரம் வார்த்தைகளால் சொல்லி மாளாது. ஆகாயத்திலிருந்து கொட்டப்படும் குண்டுகளிலிருந்து உயிர் காத்துக் கொள்ள முயற்சிக்கும் போராட்டம் இவர்களுக்கு.

ஒரு லட்சம் மக்கள் கிளிநொச்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்ற செய்தி பலருக்கு நம்ப முடியாததாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் மனித கேடயத்திற்காகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் பரப்பப்படுகிறது. புலிகளுடன் இணைந்து செல்வது என்பது இவர்களுக்குத் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

போர் நிறுத்தம், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு ஆகிய இரண்டும் தான் இன்றைய இலங்கையின் தேவை. தமிழ் மக்களின் உயிருக்கும், தொன்மைமிக்க பண்பாட்டு வாழ்க்கைக்கும் ஒரு பேரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு உண்மையானதோ, அவ்வளவு உண்மை, சிங்கள மக்களின் எதிர்காலமும் இந்த போர் மூலம் நாசப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும். இலங்கையின் இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, ராணுவத்திற்காக மட்டுமே தொகை ஒதுக்கிய பட்ஜெட்டாக அமைந்துவிட்டது.

மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 20 சதவீதத்தை ராணுவத்திற்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இது இலங்கை ரூபாயில் 17 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. இன்றைய உலகில் இத்தகைய பெரும் தொகையை ராணுவத்திற்கு எந்த நாடும் ஒதுக்கியதில்லை. அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா, இந்தியா, ஈரான் முதலான நாடுகள் இலங்கையுடனான ஆயுத வியாபாரத்தில் பெருந்தொகையைப் பெற்றுவிட்டன.

இதைத் தவிர, பெரும் எண்ணிக்கையில் இலங்கை ராணுவத்தினர் இறந்த பிறகும், சிங்களர் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒருவரை இலங்கை ராணுவத்திற்குத் தர வேண்டும் என்று அண்மையில் அதிபர் ராஜபக்ஷ வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

ஒருகாலத்தில் தனி ஆட்சி நடத்திய தமிழ் மன்னர்களின் மீது பகைமை கொண்டு படை திரட்டிய சிங்கள அரசர்களின் வெறிச் செயலைத்தான் இது நமக்கு நினைவுபடுத்துகிறது.

இலங்கை ராணுவத்தின் இன்றைய நெருக்கடியை, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மங்கல சமரவீர தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன்படி கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் என்றும் ஊனமுற்றவர்கள் 25 ஆயிரம் பேர் என்றும் தெரிகிறது. அண்மையில் வெளியாகியுள்ள ஒரு தகவல் பெரிதும் நம்மை யோசிக்க வைக்கிறது. படைமுனையில் போர் புரியும் ராணுவ வீரர்களுக்கான சம்பளத்தைக்கூட இலங்கை அரசாங்கத்தால் கொடுக்க முடியவில்லை என்பது தெரிகிறது.

இப்பொழுது மீண்டும் 37 ஆயிரம் பேரை ராணுவத்தில் சேர்த்திருக்கிறார்கள். இலங்கை ராணுவத்தின் சார்பில் போரில் பங்கேற்று இறந்து கிடப்பவர்களைப் பார்த்தால் அனைவரும் பள்ளி மாணவர்களைப் போலவே தோற்றத்தில் காணப்படுகிறார்கள். இவர்களில் மூன்று ராணுவ வீரர்களின் அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வயது 17 என்று இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அனைத்து தகவல்களையும் தொகுத்துப் பார்த்தால், தமிழ் மக்களை அழிப்பதுதான் யுத்தத்தின் நோக்கமாகத் தெரிகிறது. இலங்கை விடுதலை அடைந்த போது சிங்கள மக்களின் எண்ணிக்கை 70 லட்சம் என்று கூறப்பட்டது.

தமிழ் மக்களின் அன்றைய மக்கள்தொகை 35 லட்சம். இதில் மலையகத் தமிழர்களும், முஸ்லிம் தமிழர்களும் அடங்குவார்கள். இன்று இலங்கையில் சிங்கள மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சம். அதேநேரத்தில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.

60 ஆண்டுகளில் சிங்கள மக்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்காகப் பெருக்கம் அடைந்துள்ளபோது, தமிழ் மக்களின் எண்ணிக்கை ஏன் பெருக்கம் அடையவில்லை? இதில் அடங்கியுள்ள இன அழிப்பு கொள்கையை எப்படி நம்மால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்?

இதைத் தவிர, இன்றைய இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ராணுவத்தால் தேசத் துரோகிகளாகக் கருதப்படுகிறார்கள். 25 ஆயிரத்துக்கு அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இரவு பகல் என்று பாராமல் ராணுவம் நடத்தும், இடைவிடாத சந்தேக வேட்டையில் தமிழ் குடும்பங்கள் முற்றாக தங்கள் நிம்மதியை இழந்துவிட்டனர். மக்களில் பெரும் எண்ணிக்கை, ஒன்று ராணுவப் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது திறந்தவெளி சிறைச்சாலையைப் போன்ற அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதை விடவும் மற்றொரு மனித நேயமற்ற செயலும் நடந்துள்ளது. இந்திய அரசின் மூலம் தமிழக அரசால் அனுப்பப்பட்ட பொருள்கள்கூட, இலங்கைத் தமிழக மக்களுக்கு சரியாகப் போய்ச் சேரவில்லை. உணவுப் பொருள்களில் ஒரு பகுதி திருட்டுப் போய்விட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தமிழக மக்கள் அனுப்பிய உணவுப் பொருள்களையே திருடி எடுத்துக்கொண்டவர்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளைத் தரப்போகிறார்கள் என்ற கேள்வியையும் ஊடகங்களில் அங்குள்ள தமிழ் மக்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

இலங்கை அரசின் மற்றொரு முகம் மிகவும் கொடூரம்மிக்கதாக இருக்கிறது. தமிழ் மக்களின் மீதான வான்வெளித் தாக்குதலை இது நடத்துகிறது. இதுவரை ஆறாயிரம் முறை குண்டுகள் போடப்பட்டுள்ளன. அடிப்படையான போரைத் தரையில் நின்று இலங்கை ராணுவம் நடத்தவில்லை. பன்னாட்டு ராணுவத்தின் துணை கொண்டு வான்வெளித் தாக்குதலை நடத்துகிறது. விமானத்திலிருந்து போடப்படும் குண்டுகள் உலகில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை. கண்ணி வெடிகள் அபாயம் மிகுந்தவை. இவை மொத்தம் 10 லட்சம் பேரை கம்போடியாவில் மட்டும் கொலை செய்திருக்கிறது.

கண்ணி வெடியைப் போன்ற அபாயம் நிறைந்ததாகக் கருதப்படும் மற்றொன்றுதான் கொத்து வெடிகுண்டுகள் (கிளஸ்டர் குண்டுகள்). வானிலிருந்து பாராசூட்டுகள் மூலம் கீழிறக்கப்படும் இந்த குண்டுகள் ஒன்று நூறாகப் பிரிந்து வெடித்து மண், மரம், செடி, கொடிகளுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. ஒரு குறிப்பிட்ட இனமக்களை அழிக்க, இந்த வகையாக குண்டுகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளில் இந்த குண்டுகள் போடப்பட்டுள்ளன. காற்றில் வெடித்து உரசி வெடிக்கக் கூடியவை இந்த குண்டுகள். வெடிக்காமல் கிடக்கும் குண்டுகள் பல ஆண்டுகள் காத்திருந்து மக்கள் உயிரை வாங்கும் அபாயத்தையும் தனக்குள் தேக்கி வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இந்த கிளஸ்டர் குண்டுகளின் அபாயம் குறித்த ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் சிறப்புக் கூட்டம் நடந்துள்ளது. இதில் 122 நாடுகள், ""கிளஸ்டர் குண்டுகளை உற்பத்தி செய்வதும் இல்லை, விற்பனை செய்வதும் இல்லை'' என்று ஐ.நா.வின் வழிகாட்டுதலின்படி கையொப்பமிட்டுள்ளன. கொடுமைமிக்க கிளஸ்டர் குண்டுகள்தான் இலங்கைத் தமிழ் மக்களின் மீது பெரும் எண்ணிக்கையில் போடப்பட்டுள்ளது. எதிரிகளின் இலக்குகள் பற்றி கவலையில்லாமல் குண்டுகளைப் போடுதல் பொதுமக்களை அழிக்கும் நோக்கம் கொண்டதாகத்தான் இருக்க முடியும். தமிழ் மக்களைக் கொன்றும், ஊனப்படுத்தியும் மகிழ்ச்சியடையும் இந்த யுத்தம் மூலம் தமிழ் மக்களின் பூர்வ பிரதேசங்கள் எதற்கும் பயன்படாதவாறு குண்டுகளின் மூலம் நாசப்படுத்தப்பட்டுவிட்டது. மனிதனைப் போலவே மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உயிரை இழந்து கொண்டிருக்கிறது.

உலகமயமும், தாராளமயமும் இன்று உலக இன அழிப்பு மயத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும், பாலஸ்தீனத்திலும் புகழ்மிக்க ஆதியினங்களின் அடையாளங்களை யுத்தத்தின் மூலம் அழிக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா. இலங்கைத் தமிழ் மக்களையும் இவ்வாறு அழிப்பதற்கு இதேபோன்று திட்டங்களைச் செயல்படுத்துகிறார்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுந்துவிட்டது. அமெரிக்கத் தளபதியுடன் இணைந்து இந்தியத் தளபதியும், பாகிஸ்தான் தளபதியும் வன்னிப்பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான போருக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் தமிழக மக்களை படுகொலை செய்யும் யுத்தத்தை இந்திய அரசு முன்னின்று நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனைப் போக்க வேண்டிய கடமை மன்மோகன் சிங்குக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் தமிழகத்தின் 6 கோடி மக்களும் அவரை எதிர்காலத்தில் மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவர் உணர்ந்து கொள்ளுதல் அவசியமானதாகும்.

Monday, January 12, 2009

சிகாகோவில் முழங்கிய சிங்கம் Thanks to Dinamani

சிகாகோவில் முழங்கிய சிங்கம்

த. ஸ்டாலின் குணசேகரன்


""நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். ஐயகோ! என் சொல்வேன். சகோதரர்களே! மக்களின் கொடிய வறுமையை என் கண்களில் கண்டு துயருற்றேன். என் கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுடைய வறுமையையும், துன்பங்களையும் அகற்ற முதலில் முயற்சி செய்யாமல், அவர்களிடம் மதத்தைப் போதிப்பது பயனற்றது என்பது என் உறுதியான முடிவாகும். இக் காரணத்திற்காகவே, இந்திய ஏழை மக்களின் விமோசனத்திற்கு வழிதேட நான் அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறேன்'' என்று தனது சிகாகோ பயணத்திற்கான காரணத்தைப் பிரகடனப்படுத்தினார் சுவாமி விவேகானந்தர்.

""கீழை நாட்டின் அறிஞர் பெருமான் ஒருவர் அரசாங்கத்தின் உதவியில்லாமல், அழைக்கப்படாமல், எந்த ஒரு சமய அமைப்பின் ஆதரவில்லாமல், ஆழம் காணவியலாத கடலால் பிரிக்கப் பெற்ற இந்தியாவிலிருந்து மேற்கொண்ட பயணம் முதல்தடவையாக நவீன இந்தியாவின் வரலாற்று ஏடுகளிலும் அமெரிக்காவின் சமய வரலாற்றிலும் பதிவாகியுள்ளது'' என்று விவேகானந்தரின் அமெரிக்க பயணம் குறித்து சுவாமி அபேதானந்தர் குறிப்பிடுகிறார்.

1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பதினேழு நாள்கள் அமெரிக்க நாட்டிலுள்ள சிகாகோ நகரில் சர்வமத சபைக் கூட்டம் நடைபெற்றது. உலக சமய வரலாற்றில் பல மதங்கள் ஒன்றிணைந்து உலகளாவிய சர்வமத சபைக் கூட்டத்தை நடத்தியது இதுவே முதன்முறையாகும்.

இம்மாநாட்டில் கிறிஸ்தவ மதத்தின் இரு பிரிவுகள், இஸ்லாம் மதம், இந்து சமயம், சமண சமயம், பெüத்தம், யூதம், கன்பூஷியஸ் மதம், ஷிண்டோ மதம், ஜராதுஷ்ட்ர மதம் என 10 மதங்கள் பங்கேற்றன. பலவிதமான மதங்களின் அடிப்படைக் கொள்கைகள் எவை என்பதையும், அவ்வாறான கொள்கைகள் மக்கள் மத்தியில் எவ்வாறு போதிக்கப்படுகிறது என்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுதல் சர்வமத சபைக் கூட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

அதேபோன்று அக்காலத்தின் பெரும் பிரச்னைகளான மதுப்பழக்கம், கல்லாமை, வறுமை முதலியவற்றுக்கு தீர்வுகாண மதம் எவ்வாறெல்லாம் உதவ முடியும் என்பதை தகுதிவாய்ந்த மதத்தலைவர்களின் உரைகளின் மூலம் அறிந்து கொள்ளும் நோக்கிலும் இச்சபைக் கூட்டம் கூட்டப்பட்டது. நிலையான உலக சமாதானத்தைப் பெறுவதற்கு ஒரு நாட்டோடு இன்னொரு நாடு நட்பு பாராட்ட இக் கூட்டம் அடித்தளமாகுமென்றும் அறிவிக்கப்பட்டது.

சர்வமத சபைக் கூட்ட நிகழ்ச்சிகள் தினசரி காலை பத்து மணிக்குத் தொடங்கி இரவு பத்து மணி வரை கருத்தரங்க முறையில் நடைபெற்றது.

சபை கூடிய அரங்கில் ஏறத்தாழ ஏழாயிரம் மக்கள் அமர்ந்திருந்தனர். இந்தியாவிலிருந்து பிரம்ம சமாஜத்தின் பிரதிநிதிகளாக கோல்கத்தா பிரதாப் சந்திர மஜும்தார், மும்பை நாகர்கர், சமண சமயத்தின் சார்பில் வீர்சந்த் காந்தி, பிரம்ம ஞான சபையின் பிரதிநிதிகளாக அன்னிபெசன்ட் அம்மையார், சக்கரவர்த்தி, இலங்கை மகாபோதி சொசைட்டியின் சார்பில் அனகாரிக தர்மபாலா, மணிலால் துவேதி, நரசிம்மசார்யா, லட்சுமி நாராயணன் ஆகியோரும் இச்சர்வமத சபையில் பங்கேற்றனர்.

இச் சபையில் பங்கேற்ற சுவாமி விவேகானந்தர் குறித்து சுவாமி நிகிலானந்தா ""சுவாமி விவேகானந்தர் எந்தக் குறிப்பிட்ட சமய உள்பிரிவின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளாமல், வேதங்கள் கூறும் அனைத்து உலக சமயத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

விவேகானந்தரின் தோற்றம் அங்கு குழுமியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சுமார் ஆறடி உயரமும், கட்டுக்குலையாத கம்பீரமான உடற்கட்டும், நீண்டு தொங்கிக் கொண்டிருந்த ஆரஞ்சு வண்ண அங்கியும், காவி நிறத் தலைப்பாகையும் அடங்கிய அவரின் தோற்றப்பொலிவு அங்கிருந்தவர்களின் பார்வையை அவரின் பக்கம் திருப்பிற்று.

மேடையில் நடைபெற்ற பிரதிநிதிகளின் அணிவகுப்பிற்குப் பிறகு நாற்காலிகள் ஒதுக்கப்பட்டதில், சுவாமி விவேகானந்தர் வரிசைக் கிரமத்தில் முப்பத்தொன்றாம் இடத்தில் அமர்ந்து கொண்டார்.

சபையின் தொடக்க நாளின் தொடக்க நிகழ்ச்சி குறித்து விவேகானந்தர் தனது நண்பர் அழகியசிங்கப் பெருமாளுக்கு எழுதிய கடிதத்தில் ""பொதுமேடையில் பேசியறியாத நான் இந்த மகத்தான கூட்டத்தில் பேச வேண்டும்! இசை, சடங்கு, பேச்சுகள் மூலம் சபை தொடங்கியது. பேராளர்கள் ஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்தப்பட்டார்கள். எனக்கோ இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. நாக்கு கிட்டத்தட்ட வறண்டு போய்விட்டது. ஒருவகையான அச்ச உணர்வு என்னைப் பற்றிக் கொண்டதால் காலையில் பேசத் துணிவுற்று இருந்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வமத சபைக்கு முன்பு அமெரிக்காவிலேயே பொதுஇடங்களில் மூன்று முறையும், தனியார் வீடுகளில் இரண்டு முறையும் பேசியிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பினும், அவற்றையெல்லாம் சொற்பொழிவுகளாக விவேகானந்தர் கருதிக் கொள்ளவில்லையென்றும், தனக்களிக்கப்பட்ட சம்பிரதாயப் பூர்வமான கெüரவமாகவே மனதளவில் நினைத்திருந்திருக்கிறார் என்றும் உணர முடிகிறது.

சர்வமத சபைக் கூட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொருவராக பேசுவதற்கு கூட்டத் தலைவரால் அழைக்கப்பட்டனர். முதல் நாள் காலை அமர்விலேயே விவேகானந்தர் பலமுறை அழைக்கப்பட்டும் சுவாமிஜி "பிறகு பேசுகிறேன், அடுத்து பேசுகிறேன்' என்று தயக்கத்துடன் சொல்லி வந்தார். கூட்டத்தலைவருக்கு விவேகானந்தர் "பேசும் வல்லமை உள்ளவரா' என்ற சந்தேகமும் குழப்பமும் ஏற்பட்டது.

மதிய இடைவேளைக்குப் பின்னர் நான்கு பேச்சாளர்கள் பேசியதற்குப் பிறகு, விவேகானந்தர் வற்புறுத்தி அழைக்கப்பட்டார். கூடியிருந்த பல்லாயிரம் மக்கள் முன்பு தோன்றிப் பேசத் தொடங்கினார். இந்த விநாடிக்கு முன்பு அவரின் நெஞ்சில் குடிகொண்டிருந்த அச்சம் எப்படிப் பறந்து போயிற்று என்றே விளங்கவில்லை. வறண்டு போயிருந்த நாக்கு வாள்வீச்சாய் சுழன்று நாதம் எழுப்பியது.

""அமெரிக்க நாட்டு சகோதரிகளே! சகோதரர்களே!'' என்ற சொற்றொடர் மூலம் சொற்பொழிவைத் தொடங்கினார் விவேகானந்தர். அடுத்த வாக்கியத்திற்கு வாய் திறப்பதற்கு முன்பு, அவையில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கானோரும் எழுந்து நின்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கரவொலி எழுப்பினர். பரவச நிலையில் இரண்டு முழு நிமிடங்கள் இடைவெளியின்றி கரவொலி தொடர்ந்து ஒரு அலை ஓய்வதுபோல் ஓய்ந்தது.

விவேகானந்தருக்கு முன்பு உரையாற்றியவர்கள் ""கனவான்களே! சீமாட்டிகளே'' என்று வழக்கமான பாணியில் பேச்சைத் தொடங்கினர். இவற்றுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் "சகோதரிகளே! சகோதரர்களே!' என்று அழைத்ததும், அவர் சொற்பொழிவைத் தொடங்கிய கம்பீரமும், குரலுக்கு இருந்த கவர்ச்சியும் "உதட்டளவில் உச்சரிக்கிறார்' என்று எண்ணாமல் இந்த சொற்றொடரை உயிரோட்டமாக உண்மையில் உணர்ந்து பேசுகிறார் என்று அவையினர் மனதார நினைத்ததும்தான் அங்கு நிலவிய உணர்ச்சிகர சூழலுக்கான உண்மைக் காரணமாகும்.

""பிறருடைய கொள்கையை வெறுத்து ஒதுக்காத பண்புடமை, அக்கொள்கைகளை ஏற்றுக் கொள்கிற பொதுநோக்கு என்ற இரண்டினையும் உலகிற்கு கற்பித்த சமயத்திற்கு நான் உரியவன் என பெருமை பாராட்டுகின்றேன். எல்லாச் சமயங்களையும் அன்பினோடு நோக்குகின்ற பண்புடைமையிலே எங்களுக்கு நம்பிக்கையுண்டு. அதுமாத்திரமல்ல; எல்லாச் சமயங்களையும் உண்மை மார்க்கங்களென நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்'' என்று இந்து சமயத்தின் சர்வசமய சமரச நெறிக் கண்ணோட்டத்தை தனது உரையின் தொடக்கத்திலேயே அழுத்தமாகக் குறிப்பிட்டார் விவேகானந்தர்.

சர்மமத சபைக் கூட்டத்தின் முதல் நாளில் மொத்தம் 24 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. விவேகானந்தர் அன்று ஆற்றிய உரைக்குப் பின்னரும் நான்கு உரைகள் இடம்பெற்றன. அன்றைய நாளில் விவேகானந்தர் உரையே வந்தோர் அனைவரின் ஒட்டுமொத்த பெரும் பாராட்டுதலையும் பெற்றது. ஒரேநாளில் ஒரே உரையில் புகழ்க்கொடி நாட்டிவிட்டார் விவேகானந்தர்.

முதல் நாள் உரைகளெல்லாம் முடிந்த பின்னர் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடம்பர வசதிகளைக் கொண்ட பங்களாவில் தனக்குக் கிடைத்த பெயரையும், புகழையும் எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருப்பதற்குப் பதிலாக, வெறும் தரையில் படுத்துக் கொண்டு இந்திய மக்களின் வறுமைகளையும், துன்ப துயரங்களையும் நினைத்து விம்மி விம்மி அழுதார் விவேகானந்தர்.

எந்த நிலையிலும் இந்திய நாட்டு ஏழை-எளிய மக்களின் வாழ்வியல் துன்பங்களை மனதில் அசைபோட்டு கசிந்து உருகுவதைக் கடைசிவரை வழக்கமாகக் கொண்டு வாழ்ந்தார் விவேகானந்தர்.

இரண்டாவது சொற்பொழிவு இந்தியாவின் நாட்டுப்புறப் பண்பாட்டின் சிறப்புகளை வெளிப்படுத்தியது. கற்றறியாத ஏழை மக்களின் வாழ்க்கையை விளக்கும் கதைகளை உள்ளடக்கியதாக இரண்டாவது சொற்பொழிவு அமைந்தது.

மூன்றாவது சொற்பொழிவு முதலிரண்டு சொற்பொழிவுகளைப் போன்றல்லாமல் "இந்து மதம் பற்றிய கட்டுரை' என்ற தலைப்பில் எழுதிப் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும்.

நிகழ்ச்சி நிரலில் விவேகானந்தரின் உரை கடைசியாக இடம்பெற்றிருந்தது. சர்வமத சபைக்கு வந்திருந்த பல்லாயிரம் பேரும் விவேகானந்தரின் உரையை ஆர்வத்துடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டதால், முன்கூட்டியே அவரைப் பேசவிட்டால் கூட்டம் கலைந்துவிடும் என்று எண்ணி கடைசியில் பேச வைக்க முடிவெடுத்தனர்.

ஒரு பேராசிரியர் பேசப்பேச மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு, பலர் அரங்கத்தை விட்டு வெளியேறி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அரங்கிற்கு வெளியில் நின்றிருந்த அனைவரையும் உடனடியாக உள்ளே வந்து அமரவைக்கும் நோக்கில் ""அடுத்து விவேகானந்தர் பேசுகிறார்'' என்று அறிவித்தனர். சில விநாடிகளில் அரங்கம் பழையபடி நிரம்பியது. கடைசியில் பேசவிருந்த விவேகானந்தர் இதன் காரணமாக முன்கூட்டியே பேச வேண்டியதாயிற்று.

ஐந்து சிறப்பு சொற்பொழிவுகள், வெவ்வேறு நாள்களில் நிகழ்த்தப்பட்ட பின்னர் நிறைவு நாளிலும் வீர உரை நிகழ்த்தினார் விவேகானந்தர்.

""உதவி செய், சண்டையிடாதே; ஒன்றுபடுத்து, அழித்துவிடாதே; சமரசமும், அமைதியும் வேண்டும், கருத்து வேறுபாடு வேண்டாம் என்பதை ஒவ்வொரு சமயமும் தனது கொடியில் விரைவில் எதிர்ப்பிற்கிடையே எழுதும் என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன்'' என்று நிறைவாக அழுத்தம்திருத்தமாக முழங்கினார் வீரத்துறவி விவேகானந்தர்.


(இன்று விவேகானந்தர் பிறந்தநாள்).